ஏ.எச்.எம்.பூமுதீன்
குள்ளநரிக் கூட்டங்களின் சலசலப்புக்கு நாங்கள் ஒரு போதும் அஞ்ச மாட்டோம் என தெரிவித்துள்ள வடமாகாண சபை உறுப்பினர் வை. ஜனூபர் வன்னி மாவட்டத்திலிருந்து இந்தக் குள்ளநரிக் கூட்டங்களை துரத்தியடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றும் சூழ் உரைத்தார்.
முல்லைத்தீவு ஹிஜ்ரா புரத்தில் தையல் பயிற்சி நிலை அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கொண்டவாறு காட்டமாக தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வனிகத்துறை அமைச்சருமான ரிசாத் பதியுதீன் பிரதமதிதியாக கலந்து கொண்ட நிகழ்வில் ஜனூபர் மேலும் தெரிவித்தாவது
2001 லிருந்து வன்னிக்கான தலைமையை ஏற்றிருக்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீனுடன் நாம் இணைந்து கொண்டதிலிருந்து அவரது வழிகாட்டலில் எமது அபிவிருத்திப்பயணம் வீறுநடை போட்டு வருகின்றது.
இந்தப் 15 வருட காலத்திற்குள் பிரதேசத்தை மட்டுமன்றி மக்களின் விமோசனத்திற்கும் பாரிய பங்களிப்பை செய்துள்ள அமைச்சர் ரிசாத் பதியுதீன் – அரசியற் தலைவர் என்ற ரீதியில் பலரை அரசியலிலும் முன்னேற்றம் அடையச் செய்தார்.
இனவாதம் மதவாதம் கடந்த காலங்களில் வன்னியில் காலூன்றி வன்னியில் ஒரு முஸ்லிம் அரசியற் தலைமையை இல்லாது ஒழி;க்க செய்தது. அந்தச் சதி இன்று வேறு வடிவில் அரங்கேற முயற்சிக்கப்படுகின்றது.
இதன் பின்னணியில் அன்றைய இனவாதிகளும் மதவாதிகளும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளமை வன்னி மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நாங்கள் இன்று தையல் இயந்திரம் கொடுப்பது அதன் மூலம் தமிழ் முஸ்லிம் உறவை வளர்ப்பது மேற்சொன்ன குள்ளநரிக் கூட்டங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இப்படிப்பட்ட குள்ளநரிகளுக்கு நாங்கள் கூற விரும்புவது ஆகக் குறைந்தது தையல் ஊசியையாவது இந்த ஏழை எளிய மக்களுக்கு கொடுங்கள் என்பதாகும்.
1990 க்கு முன் இந்த மாவட்டத்திலிருந்த தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்திலும் இந்த ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவுமே இவ்வாறான தையற்பயிற்சி நிலையங்களை அமைச்சர் ஏற்படுத்தி வருகின்றார்.
எனவே இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளும் அமைச்சருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதோடு இதற்கு எதிராக செயற்படும் குள்ளநரிகளையும் புல்லுருவிகளையும் விரைவில் வன்னி மாவட்டத்திலிருந்து துரத்தியடிக்க ஒன்று படுவோம். என மேலும் தெரிவித்தார்.