டாக்டர். ILM. றிபாஸ் MBBS, MSc, MD (Reading at PGIM Colombo):
நவம்பர் மாதம் நீரிழிவு நோய்க்குரிய மாதமாக அந்த நோய் பற்றிய விளிப்புனர்வுக்குரிய மாதமாக உலகில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நவம்பர் 14 ம் திகதியை உலக நீரிழிவு வியாதிக்கான தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு உலக நாடுகளின் சுகாதார திணைக்களங்களும் வைத்திய துறை சார்ந்த பல்வேறு நிறுவனங்களும் இந்த தினத்தில் நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வினை தூண்டி வருவதுடன் இவ்வியாதியினை கட்டுப்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றன.
இந்த அடிப்படியில் எமது வாசகர்களுக்கும் நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வை தூண்டும் முகமாக இக்கட்டுரைத் தொடர் வரையப்படுகிறது.
நீரிழிவு நோய் குறித்த சரியான புரிதல் மற்றும் அணுகுமுறை எம்மிடம் உருவாகிவருகிறதா என்பது குறித்தும், நீரிழிவு நோய் தோற்றுவித்திருக்கும் சுகாதார பொருளாதார சிக்கல்கள் குறித்தும் கூடவிருந்து கொல்லும் நீரிழிவு நோய் என்கிற இந்த தொடரின் அடுத்து வரும் பகுதிகளில் பார்க்கலாம். பெரும்பான்மை மக்களை பாதிக்கத்துவங்கியிருக்கும் இந்த இனிப்பு நோயின் கசப்பு உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.
நீரிழிவு நோய் உலக அளவில் பெரும் எண்ணிக்கையான மக்கள் தொகையினை பாதித்து வருகிறது. வயது வந்தவர்களில் சுமார் நான்கில் ஒருவர் சீனி நோயாளி எனும் அளவிற்கு இந்த நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது அத்தோடு எமது நாட்டைப் பொறுத்தவரை சுமார் 20 % ஆனா அதாவது ஐந்தில் ஒரு நபர் சீனி வியாதியின் தாக்கத்திட்கு உட்பட்டவராகவே இருக்கிறார் என்கின்ற கசப்பான தகவல் எமது சுகாதார நிலை தொடர்பான அதிரச்சித்தகவலாக உள்ளது.
அத்துடன் எமது அண்டை நாடான இந்தியா உலக அளவில் சீனி நோயின் தலைமையகமாக மாறியிருக்கிறது. உலக மக்கள் தொகை அடிப்படையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவில் உலகிலேயே அதிகமான நீரிழிவு நோயாளார்கள் இருக்கிறார்கள். இன்றைய நிலையில் சுமார் நான்கறை கோடி இந்தியர்கள் சீனி நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை அடுத்த பத்தாண்டுகளில் இரண்டு மடங்காக உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்த புள்ளிவிவரங்கள் எல்லாம் எமது ஆரோக்கியம் ஆபத்தான கட்டத்தை அடைந்திருப்பதை காட்டுவதாக மருத்துவ நிபுணர்களால் பார்க்கப்படுகிறது. பெருகிவரும் இந்த சுகாதார நெருக்கடி குறித்து நாம் அறிந்து கொள்ளாமல் அது குறித்த விழிப்புணர்வு இல்லாமல் வாளாவிருப்பது எம்மையும் எமது சந்ததியினரையும் ஒரு ஆபத்தான நிலைக்கு தள்ளிவிடுவதோடு தரமற்ற பலகீனப்பட்ட ஒரு வாழ்க்கை நோக்கியே எம்மை இட்டுச்செல்லும்.
பொதுவாகவே வசதிபடைத்த நகர்புறவாசிகளின் நோயாக பார்க்கப்படும் சீனி நோய், இன்று இலங்கையின் கிராமப் புறங்களிலும் வேகமாக அதிகரித்துவருவதை பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இதேவேளை, இளைய தலைமுறை இலங்கையர்களிடம் பெருகிவரும் ஒபிசிடி எனப்படும் உடல் பருமன் என்பது எதிர்காலத்தில் நீரிழிவு நோயின் தாக்கத்தை அதிகப்படுத்தும் என்று எதிர்வு கூறுகிறார்கள் நீரிழிவு நோய் நிபுணர்கள்.
எபிடெமிக் என்கிற ஆங்கில வார்த்தையை, இதுவரை நாம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிற ஒரு தொற்றுநோயாக குறிப்பிட்டு வந்திருக்கிறோம். சீனி நோயானது தொற்றுநோயைப் போல வேகமாக பரவி வருகிறது. அதுமட்டுமல்ல, சீனி நோய் என்பது குறிப்பிட்ட குடும்பங்கள், சமூகம், மக்கள் தொகையில் ஒருவிதமான தொடர் தொற்றாக உருவாகியிருப்பதையும் நாம் காண்கிறோம் என்கிறார் உலக நீரிழிவுநோய் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பேராசிரியர் பியர் லெபெர்
ஒருவருக்கு சீனி நோய் வந்து விட்டால் அவர், தனது வாழ்நாள் முழுமையும் மருந்து மாத்திரைகளை சார்ந்தே உயிர் வாழவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகிறார். இந்த மருந்து மாத்திரைகளை சார்ந்து வாழும் நிலைமை என்பது சீனி நோயாளிகளுக்கும் அவர் தம் குடும்பங்களுக்கும் மிகப்பெரும் பொருளாதார சுமையை ஏற்படுத்துகிறது.
பதிவு செய்யப்பட்ட மனித வரலாற்றில் சீனி நோய் குறித்து சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தில் அறியப்பட்டிருந்ததற்கான பதிவுகள் இருக்கின்றன.
கி.பி. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த சுஷ்ருதா என்கிற இந்திய மருத்துவர் இந்த சீனி நோய் குறித்த குறிப்பை பதிவு செய்திருக்கிறார்.
இதற்கான வலுவான சிகிச்சை முறை என்பது இருபதாம் நூற்றாண்டில் தான் உருவானது. 1922ஆம் ஆண்டில் பேண்டிங்க் அண்ட் பெஸ்ட் என்ற கனேடிய விஞ்ஞானிகள் கூட்டணி இன்சுலின் மூலம் நீரிழிவு நோயை குணப்படுத்தலாம் என்று கண்டறிந்தனர்.
அதுவரை, நீரிழிவு நோய் என்பது மருத்துவ சிகிச்சை முறையால் குணப்படுத்த முடியாத நோயாகவே மனிதர்களை அச்சுறுத்திவந்தது.
இன்சுலினை கண்டுபிடித்த பிரெடெரிக் பேண்டிங்கின் நினைவை போற்றும் விதமாக அவரது பிறந்த தினமான நவம்பர் 14 ஆம் தேதி, ஆண்டுதோறும் உலக நீரிழிவு நோய் தினமாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அதன் மூலம் சீனி நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சர்வதேச பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.