கைத்தொழில் மற்றும் வார்த்தக அமைச்சின் புதிய செயலாளராக நியமனம் பெற்ற திரு கே.டி.என்.ரஞ்சித் அசோக இன்றைய தினம் (04/ 10/ 2017) அமைச்சில் தனது பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார்.
இந்தப் பதவியேற்பு நிகழ்வில் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பங்கேற்றார்.
புதிய செயலாளராக பதவியேற்ற ரஞ்சித் அசோக நிர்வாக சேவையில் விஷேட தரத்தில் ஓர் உத்தியோகத்தர் ஆவார். 1990 ஆம் ஆண்டு நிர்வாக சேவையில் இணைந்த அவர் 27 வருடங்களுக்குள் நிர்வாக சேவையில் பல பதவிகளை வகித்துள்ளார். சமுர்த்தி அதிகார சபையின் திட்டமிடல் பணிப்பாளராகவும், இலங்கை அபிவிருத்தி, நிருவாக நிறுவனத்தின் ஆலோசகராகவும், மாவட்ட செயலாளராகவும் மற்றும் கல்வி அமைச்சு மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சுக்களின் மேலதிக செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
நிதி அமைச்சில் 12 வருடங்களை பூர்த்தி செய்துள்ள ரஞ்சித் அசோக அவர்கள் 2015ஆம் ஆண்டு முதல் வர்த்தக மற்றும் முதலீட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றியுள்ளார்.
புதிய செயலாளர் பதவியை பொறுப்பேற்ற ரஞ்சித் அசோக, அரச கைத்தொழில் கோட்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான சிறந்த சூழலை ஏற்படுத்துவதே தமது எதிர்ப்பார்ப்பு எனவும் அமைச்சின் விடயங்களைச் சார்ந்த வேலைத்திட்டங்களை மேம்படுத்துவதற்கும், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பற்றாக்குறையின்றி நுகர்வோருக்கு பெற்றுக் கொடுப்பதற்கும் தாம் விஷேட கவனம் செலுத்தவுள்ளதாகவும் கூறினார்.
ஹங்வெல்ல மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவராகிய ரஞ்சித் அசோக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாவார்.
புதிய செயலாளர் கடமையேற்ற இந்நிகழ்வின் போது நுகேகொட நாலந்தா ராமாதிபதி பூஜ்ய தினியாவல பாலித தேரோ, நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க ஆகியோரும் அமைச்சின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
ஊடகப்பிரிவு