Breaking
Mon. Dec 23rd, 2024

கோலாலம்பூரில் நடந்த கொங்கு தமிழர் மாநாட்டில் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் கலந்து கொண்டு பேசினார்.

கோலாலம்பூரில் நடந்த கொங்கு தமிழர் மாநாட்டில் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் கலந்து கொண்டு பேசினார்.

சுமார் 3 கோடி மக்கள் தொகையை கொண்ட மலேசியாவில் 8 சதவீதம் பேர் இந்தியர்கள் (தமிழர்கள்) ஆவர். இதில் தமிழகத்தின் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த 2 லட்சம் தமிழர்களும் அடங்குவர். இந்த பிரிவினர் சார்பில் மலேசிய கொங்கு தமிழர் அமைப்பு நிறுவப்பட்டு உள்ளது. இதில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பு சார்பில் முதலாவது கொங்கு தமிழர் மாநாடு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது.

இதன் தொடக்க நிகழ்ச்சியில் 12 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் பிரதிநிதிகள் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டில் அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியையே நான் நம்புகிறேன். இந்திய சமூகத்தினருக்கு உதவுவதற்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுப்பேன்.

அரசின் தொடர் நடவடிக்கைகளால் தமிழ் மொழியும், கலாசாரமும் மலேசியாவில் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மலேசிய மாணவர்களுக்கு தொடக்க கல்வி முதல் தமிழ் மொழியை கற்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இருக்கும் 524 பள்ளிகளுடன் மேலும் 6 தமிழ் தொடக்கப்பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. தமிழ் மொழியும், தமிழ் இலக்கியமும் மேல்நிலைப்பள்ளிகளிலும் கற்பிக்கப்படுகிறது.

இந்தியாவும், மலேசியாவும் இணைந்து செயல்பட ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக நான் நம்புகிறேன். தெற்கு ஆசியாவில் மலேசியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி தளமாக கடந்த 1998-ம் ஆண்டு முதல் இந்தியா விளங்கி வருகிறது. இந்தியாவில் மலேசியாவின் நேரடி முதலீடு கடந்த 2014-ம் ஆண்டில் ரூ.5 லட்சம் கோடியாக இருந்தது. இத்தகைய இரு நாட்டு வர்த்தக உறவை பலப்படுத்த மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு நஜிப் ரசாக் கூறினார்.

இந்த மாநாட்டில் மலேசியாவுக்கான இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, கொங்கு நாடு மலேசிய தலைவர் கே.சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

By

Related Post