Breaking
Mon. Dec 23rd, 2024

கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளுமெண்டல் பகுதியில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் கறுப்பு நிற ஹைப்ரிட் கார் ஒன்று புளுமெண்டல் பகுதியில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

புளுமெண்டல் பகுதியில் உள்ள கட்டிடமொன்றின் அருகில் கைவிடப்பட்ட நிலையில் குறித்த கார் மீட்கப்பட்டுள்ளது. எனினும் காரின் உரிமையாளர் யார் என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

இலக்கத்தகடற்ற கறுப்பு நிற ஹைப்ரிட் கார் மற்றும் வெள்ளை வேன் ஆகியவற்றில் வந்த இனந்தெரியாத நபர்களே புளுமெண்டல் – பெனடிக் படசாலையின் மைதானத்துக்கு முன்னால் உள்ள பாதையில் வைத்து நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.
இதில் பெண்ணொருவர் பலியானதுடன் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களின் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட  மற்றுமொரு வெள்ளை நிற வேன் கைப்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post