இந்திய வீடமைப்புத் திட்டத்தில் முழுமையாக பாரபட்சம் காட்டப்பட்ட கொண்டச்சி கிராம மக்களுக்கு, அமைச்சர் றிஷாத் தனது சொந்த முயற்சியில் 140 வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.
1990ஆம் ஆண்டு மன்னார் கொண்டச்சியிலிருந்து வெளியேறி, புத்தளத்தில் அகதிகளாக வாழ்ந்து வந்த இந்த முஸ்லிம் மக்கள், சமாதானம் ஏற்பட்ட பின்னர் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பினர். தாம் வாழ்ந்த பூர்வீக கிராமங்களில் வளர்ந்திருந்த காடுகளைத் துப்புரவாக்கி, மீண்டும் அந்த இடத்தில் கொட்டில்களை அமைத்து வாழ்ந்து வந்தனர். இந்த மக்களுக்கே தற்போது 140 வீடுகளை அமைச்சர் றிசாத் வழங்கியுள்ளார், வீட்டு நிர்மாணப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. அத்துடன் சிலாவத்துறை – முசலியில் மீள்குடியேறியுள்ள மக்கள் எதிர்நோக்கும் பொதுவான பிரச்சினையான நீர்ப் பிரச்சினை கொண்டச்சி கிராம மக்களையும் விட்டபாடில்லை. இவர்களுக்கான தற்காலிக குடிநீர்த் தேவை அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும், நிரந்தர குடிநீர் பெறுவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் மின்சாரம் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளிலும் அமைச்சர் றிசாத் ஈடுபட்டு வருகின்றார். பாதைப் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கொண்டச்சி, சிலாவத்துறை, கரடிக்குளி, மறிச்சுக்கட்டி பிரதேசங்களில் முஸ்லிம்கள் வாழ்ந்த பூர்வீகக் கிராமங்களில் அந்த மக்கள் மீளக்குடியேறும் போதே, வில்பத்துக் காட்டை முஸ்லிம்கள் அழிக்கின்றார்கள், றிசாத் இதற்கு துணை செய்கின்றார் என இனவாதிகள் கூச்சலிட்டு வருகின்றனர்.
மீள்குடியேற்றம் தொடர்பில் அமைச்சர் றிஷாத்துக்கு எதிராக இனவாதச் சூழலியலாளர்களும், பேரினவாதிகளும் இணைந்து ஆறு வழக்குகளை நீதி மன்றத்தில் தொடுத்திருக்கின்றனர். இத்தனைக்கும் மத்தியிலே அமைச்சர் றிஷாத் தனது பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.