கொண்டயா என்ற துனேஷ் பிரியசாந்த சார்பில் குரல் கொடுத்து வரும் சட்டத்தரணி உந்துல் பிரேமரத்னவின் செயற்பாடுகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என காவற்துறையின் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக தற்போது பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் காவற்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
கொட்டதெனியாவ சிறுமி சேயா கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த துனேஷ் பிரியசாந்தவுக்கு எதிராக சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் இல்லை என உந்துல் பிரேமரத்ன அண்மையில் ஊடகங்களிடம் கூறியிருந்தார்.
2010 ஆம் ஆண்டு 06 மாதம் 23 ஆம் திகதி பெரலிய – பெம்முள்ள பிரதேசத்தில் வீடொன்றுக்குள் புகுந்து 15 வயது சிறுமியை கடத்திச் செல்ல முயற்சித்த சம்பவம் தொடர்பில் துனேஷ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக காவற்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குற்றத்திற்காக 20 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் 3000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு வரை அந்த சிறைத்தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
துனேஷ் பிரியசாந்தவை இதுவரை சந்தேக நபர் என குறிப்பிட்டு வந்தாலும் தற்போது அவர் ஒரு குற்றவாளி எனக் பகிரங்கமாக கூறுவதாகவும் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
அறிவு இருக்கும் எவரும் கொண்டயா போன்றவர்களை ஊடக சந்திப்புகளுக்கு அழைத்து வர மாட்டார்கள். அவ்வாறான நபரை வழக்கை ஒன்றை தொடர வலியுறுத்த சட்டத்தரணிகளால் முடியாது. அது சட்டத்தை மீறும் செயல் எனவும் காவற்துறைப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.