Breaking
Mon. Dec 23rd, 2024

கொத்மலை மகாவலி மகாசாயா பக்தர்கள் வழிபடுவதற்காக திறந்து வைக்கும் வைபவம் நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

இலங்கையின் மிகப்பெரிய அபிவிருத்தி திட்டமான மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு மேலாக கொத்மலை மகாசாயா நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 189 அடி உயரம் கொண்ட மகாவலி மகாசாயா அநுராதபுரம் ருவன்வெலிசாயாவிற்கு அடுத்ததாக மிக உயரமான சிலையாக கருதப்படுகிறது. கொத்மலை நீர்த்தேக்கத்தை நிர்மாணிக்கையில் மூழ்கடிக்கப்பட்ட விகாரைகள் மற்றும் அதற்காக தமது சொத்துக்களைத் தியாகம் செய்த மக்களை நினைவு கூர்வதற்காக முன்னாள் மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காலஞ்சென்ற காமினி திசாநாயக்காவின் சிந்தனைக்கு அமைய இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன தலைமையில் 1983 ஆம் ஆண்டு இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டதுடன் முப்பத்தி மூன்று ஆண்டுகளின் பின்னர் இன்று இது மக்கள் வழிபடுவதற்காக திறந்து வைக்கப்பட்டது. இவ் வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி குறிப்பிடுகையில்,

இந்நாட்டின் முதலாவது ஜனாதிபதியினால் அடிக்கல் நடப்பட்ட தாது கோபுரத்தை 06 ஆவது ஜனாதிபதியான தான் திறந்து வைப்பதையிட்டு மகிழ்ச்சியடையும் அதேவேளை இதன் பணிகள் முடிவடைவதற்கு இவ்வளவு காலம் சென்றமை தொடர்பாக கவலையடைவதாக குறிப்பிட்டார். திரு காமினி திசாநாயக்கா, ஆரம்பித்து வைத்த இப்பணியினைப் பூர்த்தி செய்வதற்காக பாடுபட்ட அமைச்சர் நவீன் திசாநாயக்கா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கும் மகாவலி மகாசாயாவின் விகாராதிபதி சங்கைக்குரிய திஸ்பனே ஜினானந்த தலைமைத் தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினருக்கும் ஜனாதிபதி தனது கௌரவமான நன்றிகளைத் தெரிவித்தார்.

மகாவலி மகாசாயாவிற்கான முதலாவது புஷ்ப பூஜையினை மேற்கொண்ட ஜனாதிபதி, மக்கள் வழிபடுவதற்காக அதனைத் திறந்து வைத்ததுடன் நினைவுப் பேழையினையும் திரைநீக்கம் செய்து வைத்தார். மகாவலி மகாசாயாவை நிர்மாணிப்பதற்கு பங்களிப்புச் செய்தோருக்கு ஜனாதிபதி சின்னங்களை வழங்கி வைத்ததுடன் மகாவலி மகாசாயாவின் விகாராதிபதி சங்கைக்குரிய திஸ்பனே ஜினானந்த தலைமைத் தேரர் அவர்களுக்கும் காமினி திசாநாயக்கா மன்றத்தின் தலைவர் திருமதி ஸ்ரீமா திசாநாயக்கா, சிவில் பொறியியலாளர் திரு. என்.எஸ். குலசிங்க உள்ளிட்ட பத்து பேர்களைப் பாராட்டி ஜனாதிபதியின் கரங்களினால் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மகாவலி கலாசார நிதியத்தின் தலைவர் அமைச்சர் நவீன் திசாநாயக்காவினால் ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னமும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

சியம் மகா பீடத்தின் மல்வத்தை துணைத் தலைவர் சங்கைக்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரர், ஸ்ரீ லங்கா ராமஞ்ஞ மகா பீடத்தின் மகாநாயக்கர் சங்கைக்குரிய நாப்பானே பேமசிறி தலைமைத் தேரர், கோட்டே ஸ்ரீ கல்யானி ஸ்ரீ சாமகிரி மகா சங்க சபையின் மகாநாயக்கர் சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார தலைமைத் தேரர், சங்கைக்குரிய பெல்லன்வில விமலரதன தலைமைத் தேரர், சங்கைக்குரிய நித்தியாவல பாலித்த தலைமைத் தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்நாட்டு வெளிநாட்டு அழைக்கப்பட்ட அதிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

By

Related Post