Breaking
Sun. Dec 22nd, 2024

கொலையாளிகளை கண்டு பிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்று பொலிஸாரை குறை கூறி கொண்டிருக்காமல் தங்களுக்குத் தெரிந்த அனைத்து தகவல்களையும் அச்சமின்றி முன்வந்து பொலிஸாருக்கு வழங்குவதன் மூலம் விரைவாக குற்றவாளிகளை நீதி விசாரணையின் முன்னால் கொண்டு வந்து நிறுத்த முடியும் என ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். ஷயீட் தெரிவித்துள்ளார்.

ஏறாவூரில் கடந்த ஞாயிற்று கிழமை படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் மகளினது சடலங்கள் ஏறாவூர் காட்டுப்பள்ளிவாயலில் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டதன் பின்னர் கொலையை கண்டிக்கும் விழிப்புணர்வு நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

தொடர்ந்தும் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் மகள் ஆகியோருக்கு சொர்க்கலோக வாழ்வு சௌபாக்கியம் நிறைந்ததாக அமைந்து விட வேண்டும் என்று நாங்கள் இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

இழப்புக்களை சந்தித்த அன்னார்களது குடும்பத்திற்கு அல்லாஹ்வின் அருளும் மன அமைதியும் கிட்ட வேண்டும்.

கணவனை இழந்த தாயும் தந்தையை இழந்த மகளும் மிருக வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டிருப்பதனை ஈவிரக்கமுள்ள அனைத்து உள்ளங்களும் கண்டிக்கின்றன.

தியாக திருநாளான ஹஜ்ஜுப் பெருநாளை எதிர்பார்த்திருந்த நமக்கு இந்த இரு ஜீவன்களும் படுகொலையாளிகளின் கைகளில் சிக்கி தங்களை தியாகம் செய்து கொண்டு நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார்கள்.

அதனால் எதிர்பாராத சோகத்தில் இந்த ஊர் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. சகித்து கொள்ள முடியாத இந்த வேளையிலே உள்ளக் குமுறலுடன் இருக்கின்றோம்.

கொலையாளிகளைக் கண்டு பிடித்து அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று அவாவுறுகின்றோம்.

படுகொலைகளை இனிமேலும் இடம்பெறாமல் இருக்க வேண்டுமானால் நாம் அனைவரும் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஒரு வீட்டுக்கு அதனை சுற்றியுள்ள வீட்டுக் காரர்களே பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

தகவல்களையோ அல்லது தடயங்களையோ தெரியப்படுத்தினால் நீதி மன்றம் செல்ல வேண்டி வருமே என்ற அச்சத்தை விட்டு பொதுமக்கள் விலகி அநீதியை கண்டிக்கவும் அதனை தடுக்கவும் துணிய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

By

Related Post