கொள்கைகளை மறந்து நாட்டிலுள்ள உலமாக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
இதற்காக விட்டுக்கொடுப்புகள் அவசியமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழி முறைகளை நாம் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
“இலங்கையில் வாழும் 10 சத வீத முஸ்லிம்கள் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் தாய் நாட்டுக்காக பல தியாகங்களை மேற்கொண்டுள்ளனர்” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சமூகம் பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களை பார்க்கின்றோம். அத்துடன் சந்தேகமான சூழ்நிலையிலேயே இலங்கை முஸ்லிம்கள் வாழ்கின்றனர் என அவர் தெரிவித்தார். தற்போது அரசியல்வாதிகளை மக்கள் வெறுப்போடு பார்க்கின்றதாக அமைச்சர் றிசாத் மேலும் குறிப்பிட்டார்.
முழு சமூகத்திற்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு அருள் எனும் தலைப்பிலான மாநாடொன்று நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்றது.
சவூதி அரேபியாவை தளமாக கொண்டு செயற்படும் சர்வதேச இஸ்லாமிய அகதிகள் இயக்கத்தின் இலங்கை கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.