கொழும்பில் உள்ள பள்ளிவாசல்களில் சீ.சீ.டி.வி கமெரா வசதிகள் இல்லாத பள்ளிவாசல்களுக்கு கமெராக்களை பொருத்துவதற்கும் றமழான் மாதத்தில் இரவு நேரங்களில் பள்ளிவாசல்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று முஸ்லிம் விவகாரங்கள் மற்றும் தபால் அமைச்சின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
முஸ்லிம் விவகாரங்கள் மற்றும் தபால்துறை அமைச்சர் அப்துல் ஹலீம் மொஹமட் ஹசிமினின் பணிப்பில் அமைச்சரின் அந்தரங்க செயலாளர் பாஹிம் ஹாஷிம் தலைமையில் பொரளை பள்ளிவாசலில் நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டது.
கொழும்பை சேர்ந்த பள்ளிவாசல்களின் பாதுகாப்பு, பொரளை பள்ளிவாசல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் விசாரணை ஆகியன சம்பந்தமாக இந்த சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இதில், வக்ப் வாரியம் மற்றும் கொழும்பு பள்ளிவாசல் ஒன்றியம் பிரதிநிதிகள் பங்கேற்றனர் என்றும் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.