Breaking
Mon. Dec 23rd, 2024
AppleMark
கொழும்பு மாநகர் முழுவதும் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளதோடு, பிரதான வீதிகள், வீடுகளுக்கருகில் துர்நாற்றம் வீசுகிறது.
கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் மழை வெள்ளத்தாலும், மண்சரிவினாலும் மக்கள் நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில் கொழும்பு மாநகர மக்கள் குப்பை மலைகளால் பெரும் அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர்.
கொழும்பு மாநகர், ஒருகொடவத்தை, நவகம்புர, கொட்டாஞ்சேனை, மாளிகாவத்தை, புதுக்கடை, தெமட்டகொடை, பொரளை உட்பட கொழும்பு மாநகரின் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன.  இதனால் அப் பிரதேசங்களில் துர்நாற்றம் வீசுவதோடு, ஈக்கள் மொச்சுவதையும் காணக்கூடியதாக இருந்தது.
ஒருகொடவத்தை பேஸ்லைன் வீதிக்கு செல்லும் பிரதான வீதியின் தொடர்மாடிக்கு வீட்டுத்திட்டத்தின் முன்பாக பாரிய அளிவில் குப்பைகள் மலைபோல் குவிந்திருப்பதோடு, அதற்கருகில் அமைத்திருந்த மின்மாற்றியின் பழுதை சரிசெய்வதற்கு மின்சார சபை ஊழிர்கள் பெரும் சிரமத்தை அனுபவித்ததை காணக்கூடியதாகவிருந்தது. ஏனென்றால் குப்பைகளால் அந்த மின்மாற்றி புதைந்து போயிருந்ததால் அதனை சுத்தம் செய்த பின்னரே மின் மாற்றியை பழுது பார்க்க வேண்டிய நிலை மின்சார சபை ஊழியர்களுக்கு ஏற்பட்டிருந்தது.
கொழும்பில் சேரும் குப்பைகளை அப்புறப்படுத்தி கொண்டு சென்று போடுவதற்கு இடம் இல்லாமையினால் தான் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது மழை வெள்ளம் வழிந்தோடும் நிலையில் கொழும்பு நகர் முழுவதும் குப்பைகள் குவிந்திருப்பது தோற்றுநோய்களை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
ஒருபுறம் மழை வெள்ளம் மறுபுறம் குப்பை மலைகளுக்கு மத்தியில் கொழும்பு மாநகர் மக்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். குப்பைகளை அகற்றி தொற்று நோய்கள் ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென மக்கள் கூறுகின்றனர்.
கொழும்பு மாநர சபை இது தொடர்பில் கவனம் செலுத்தி மக்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

By

Related Post