உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு எதிர்வரும் 31ஆம் திகதி இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கி மூன் கொழும்பில் தங்கியிருக்கும் போது இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை அவரது கவனத்திற்குக் கொண்டுவரும் வகையிலான அமைதிப் பேரணியொன்று ஐ.நா.காரியாலயத்தின் முன்பாக நடாத்தப்படவுள்ளது.
வடக்கு விஜயம் மேற்கொண்டு தமிழர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிவது போன்று கிழக்கிற்கும் ஐ.நா. செயலாளர் நாயகம் விஜயம் செய்து முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் கேட்டறிய வேண்டும் என அமைதிப்பேரணியில் வலியறுத்தப்படவுள்ளது.
ஐ.நா. செயலாளர் நாயகத்தை கிழக்கிற்கும் அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.
முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், வட,கிழக்கில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை, பள்ளிவாசல்களுக்கெதிரான பிரச்சினைகள், முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வையூட்டும் பேச்சுக்கள், ‘சிங்ஹலே’ அமைப்பினர் ½ மணித்தியாலயத்துக்குள் முஸ்லிம்களை அழித்துவிடுமோம் என்ற அச்சுறுத்தல்கள், சவூதி சுனாமி வீட்டுத்திட்டம் என்பன தொடர்பான விபரங்கள் அடங்கிய மகஜரொன்றும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்படவுள்ளது.
ஐக்கிய சமாதான முன்னணி இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அமைதிப் பேரணியில் முஸ்லிம்கள் பெருமளவில் கலந்துகொண்டு கவனயீர்ப்பினை வெளியிட வேண்டுமென ஐக்கிய சமாதான முன்னணியின் தலைவர் ஐ.என்.எம்.மிப்லால் தெரிவித்தார்.
எதிர்வரும் 31ஆம் திகதி இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கி மூன் முதலாம், இரண்டாம் திகதிகளில் இலங்கையில் தங்கியிருந்து சந்திப்புகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
ஐ.நா. செயலாளர் நாயகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சபாநாயகர் கருஜயசூரிய, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள், வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட்குரே வடக்கு முதலமைச்சர் விக்னேஷ்வரன் ஆகியோரைச் சந்தித்து செப்டெம்பர் 2 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து சந்திப்புகளில் கலந்துகொள்ளவுள்ளதுடன் நிலைமைகளையும் பார்வையிடவுள்ளார். கொழும்பு லக் ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் நிரந்தரமான சமாதானம் தொடர்பில் உரையாற்றவுள்ளார்.
பான் கி மூன் முஸ்லிம் தரப்புகளைச் சந்திப்பது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமான அறிவித்தல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.