-எம்.சுஐப்-
சொந்த மண்ணிலே சுதந்திரமாக வாழ்ந்த நாம் தீய சக்திகளால் துரத்தப்பட்டோம். அதனால் சுகம் இழந்தோம், சுதந்திரம் இழந்தோம். வீடு வாசல்களையும், விளைச்சல் நிலங்ளையும் இழந்தோம், தொழிலையும் தொழில் சார்ந்த உபகரணங்களையும் இழந்தோம். நமது உயிராக அமைந்திருந்த கல்வியையும் இழந்தோம்.
அகதிகளானோம். பாதசாரிகளாய் நடையில் புத்தளம் வந்தோம். அங்கே எமக்கு ஆறுதல் கிடைத்தது. அத்தனை குடும்பங்களுக்கும் வாழ்விடம்போதாது மரநிழலில், மக்கள் இல்லாத வீடுகள், மண்டபங்கள் நமக்கு குடிமனையாகின. துன்பங்களும் துயரங்களும் தொடர்கதையாகின. 1994இல் ஆட்சி மாறியது. மர்கூம் அஷ்ரப் அமைச்சரானார். அன்போடும் ஆதரவோடும் மனிதாபிமான பண்போடும் அந்த பெருமகன் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வந்தார்.
அவருக்கு நாம் செய்யவேண்டிய நன்றிக்கடனாக அவரது கட்சிக்கு வாக்களித்து பாராளுமன்ற பிரதிநிதிகளையும் அனுப்பினோம். ஆனால் அஷ்ரப்பின் மறைவின் பின்னரான மு.க அகதி மக்களைவிட்டு தூர விலகியது. எமது தேவைகள், அபிலாஷைகள் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையிலேதான் அகதிகளின் பிரதிநிதியாக மு.கவின் மூலம் மக்கள் என்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பினர். மர்கூம் அஷ்ரபின் மரணத்தின் பின்னர் மு.காவின் அரசியல் போக்கிலே எனக்கு உடன்பாடில்லை தான்தோற்றித்தனமான தீர்மாணங்களும், பிடிவாதபோக்கும் தலைமைத்துவத்தில் காணப்பட்டதால் விலகினேன்.
என்னைப்போல் பலரும் விலகினர். முஸ்லிம்களின் தனித்துவம், உரிமை, இருப்பு, அபிலாஷை என்ற பதங்களை மாறிமாறி உச்சரித்துக்கொண்டு செயற்றிறமையற்ற ஒரு கட்சியில் அங்கம் வகிக்க நான் விரும்பவில்லை. நான் அரசுடன் இணைந்தேன். உலகிலே எங்கும் நிகழ்ந்திராத கொடுமைக்கு உட்பட்ட வன்னி மக்களே என்னை தெரிவு செய்தனர். பிறந்து வளர்ந்த சொந்த மண்ணைவிட்டு துரத்தப்பட்டு கல்வியின்றி, வீடின்றி, இயல்பான வாழ்க்கையின்றி அல்லல்பட்டு வருபவர்கள். அவற்றை பெற்றுக்கொடுக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்தேன்.
நான் அரசியலில் அதிக முதிர்ச்சி பெறாதபோதும் அல்லாஹ் எனக்களித்த அமைச்சுப்பதவியை கொண்டு வடபுல மக்கள், அனர்த்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் என் சேவையை தொடர்ந்தேன். போரின் உக்கிரத்திலிருந்து உடுத்த உடையுடன் ஓடிவந்த மக்களை வவுனியாவிலும், மெனிக்பாம் போன்ற இடங்களிலும் குடியேற்றி அவர்களுக்கு என்னால் முடிந்தவரை உதவியிருக்கின்றேன்.
பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கு இது நன்கு தெரிந்தவிடயம். வடபுலத்திலே தமிழ், சிங்கள, முஸ்லிம்களுக்கு பேதமின்றி பணியாற்றியிருக்கின்றேன். என்மனச்சாட்சிக்கு விரோதமாக நான் என்றுமே நடந்ததில்லை. காழ்ப்புணர்வு கொண்ட சக்திகள் நீங்கள் பணியாற்றும் ஊடகங்களுக்கு தவறான திரிவுபடுத்தப்பட்ட தகவல்களையும் செய்திகளையும் தந்து என்னை தூசிப்பது வழமையாகிவிட்டது. மீள்குடியேற்ற , அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சராக நான் இருந்தபோது உணவு, உறக்கம், ஓய்வை பொருட்படுத்தாது இரவு பகல் என்று பாராது நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற அனர்த்தப் பிரதேசத்திற்கு உரிய நேரத்தில் சென்றிருக்கின்றேன்.
நான் என்றுமே சொகுசை விரும்பியதில்லை. அலைச்சலை பொருட்படுத்தவில்லை. ஏழைக்குடும்பத்தில் பிறந்தவன் என்பதால் கஷ்டங்களுக்கு ஈடுகொடுக்கும் சக்தியும் அனுபவமும் இறைவன் எனக்கு தந்திருக்கின்றான். கொழும்பில் இருந்துகொண்டு துரைத்தனத்து அரசியல் நடத்த நான் என்றுமே விரும்பியதில்லை. அரசுடன் நான் இருந்தபோதும் மு.காவின் நடவடிக்கைகளில் வெறுப்புற்ற புத்திஜீவிகள் என்னுடன் இணைந்தனர். யாரும் எதிர்பாராதவிதமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை உருவாக்கினோம். ஆக இந்த கட்சியை உருவாக்கி ஐந்து வருடங்களில் நாம் பாரிய வளர்ச்சி பெற்றிருக்கின்றோம்.
இக்கட்சி வளர்ச்சி பெறுவதற்கு முக்கியமான காரணிகளில் ஒன்று மக்களின் வாழ்வில் வசந்தம் வீசவேண்டும் என்ற ஆர்வத்துடனும் அக்கறையுடனும் பணிசெய்ததால்தான். இந்த கால இடைவெளிக்குள் எமது கட்சி ஒரு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சரையும் ஒரு பிரதியமைச்சரையும், ஒரு பராளுமன்ற உறுப்பினர் ஒருவரையும் வடக்கிலும் கிழக்கிலும் ஆறு மாகாண சபை உறுப்பினர்களையும் உள்ள10ராட்சி சபைகளில் 61 பிரதிநிதிளையும் பெற்றிருக்கின்றோம்.
மக்கள் எமக்கு தந்த ஆணையை நாம் சரிவர செய்திருக்கின்றோம் வடக்கு கிழக்கில் பணியாற்றிய எமது கட்சி கொழும்பில் காலுன்றவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. கிராண்ட்பாசிலும், மாளிகாவத்தையிலும் இனவாதிகளின் அடக்கு முறைகளுக்கும் அட்டூழியங்களுக்கும் எமது மக்கள் ஆளாகியபோது நாம் இரவோடிரவாக அங்கு சென்றோம். உயிரையும் துச்சமென மதித்து இனவாதிகளின் கொடூரங்களை எதிர்த்து போராடினோம்.
மன்னாரிலிருக்கும் உங்களுக்கு கிராண்ட்பாசில் என்னவேலை என்று எம்மை ஏளனமாக பார்த்து கேட்டபோதுதான் நாமும் சிந்திக்க தொடங்கினோம். தலைமைத்துவ இடைவெளியில்லாமல் வாழும் கொழும்பு முஸ்லிம்களை காப்பாற்ற ஓர் அரசியல் பலம் தேவையென்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் மேல்மாகாண சபை தேர்தல் களத்தில் போட்டியிடுவதற்கு பிரதான காரணம்.
வெறுமனே முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை மையமாக வைத்து மட்டும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடவில்லை. கொழும்புவாழ் அனைத்து மக்களுக்கும் எங்கள் பணி தொடரும். எங்கள் கட்சியில் சிங்கள, தமிழ் முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனவே இத்தேர்தலில் எமக்கு கணிசமான ஆசனங்கள் கிடைக்குமென எதிர்பார்க்கின்றோம் என கைத்தொழில் மற்றும் வனிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தனது ஊட அறிக்கையில் தெரிவித்தார்