மலையக மக்கள் பட்ட இன்னல்களுக்கு மத்தியில் பேரிடியாக நிகழ்ந்த சம்பவம்தான் கொஸ்லாந்தை மண்சரிவு அனர்த்தம். கடந்த வருடம் பண்டாரவளை – கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் ஒரு கிராமமே மண்ணுக்குள் புதையுண்டு போனது யாவரும் அறிந்ததே!
ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் கடந்த வருடம் இதேநாள் காலை வேளையில் ஏற்பட்ட குறித்த அனர்த்தத்தால் 30இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த அதேவேளை, அவர்களில் பலரின் சடலங்களையேனும் மீட்கமுடியாத அவலநிலை ஏற்பட்டது. அத்துடன் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருப்பதற்கு இடமின்றி, தமது உடைமைகளை இழந்து, பொது இடங்களிலும் உறவினர்களது வீடுகளிலும் வாழ்ந்தனர். அம்மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரண உதவிகள் கூட ஓரிரு நாட்களில் நிறுத்திக்கொள்ளப்பட்டது.
நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மலையக தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் இவ்வாறு மண்ணுக்குள் புதையுண்ட சம்பவம் இலங்கையை மட்டுமன்றி உலக நாடுகளையும் உலுக்கியிருந்தது. எனினும், பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் முகாம்களில் காலத்தை கழித்துவருவது ஏற்றுக்கொள்ளமுடியாத உண்மை.
நாட்டில் தற்போதும் தொடர்ந்து மழைபெய்து வருகின்ற நிலையில், மலையகத்தில் பல பகுதிகளில் வெள்ளமும் மண்சரிவும் ஏற்பட்டு மக்களை பீதியில் ஆழ்த்திக்கொண்டிருக்கின்றது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த அரசாங்கம் வீசிச்சென்ற வாக்குறுதியை இந்த அரசாங்கமாவது நிறைவேற்றுமா என்ற ஏக்கத்துடன் அந்த மக்கள் ஓராண்டு காலமாக காத்திருக்கின்றனர்.