Breaking
Sun. Dec 22nd, 2024
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என பெவிதி ஹன்ட என்னும் சிங்கள பௌத்த அமைப்பு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த அமைப்பைச் சேர்ந்த முரத்தட்வே ஆனந்த தேரர், இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவன்ட் கார்ட் சம்பவத்தின் அடிப்படையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்ய ஆளும் கட்சியின் சில அமைச்சர்கள் முயற்சிக்கின்றனர்.

இவர்களின் தேவைக்கு அமைய ஊழல் மோசடி விசாரணைப் பிரிவினர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

கடந்த காலங்களில் மோசடிகள் ஊழல்கள் இடம்பெற்றதாக குற்றம் சுமத்திய ஆளும் கட்சி அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் அவற்றை நிரூபிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதனால் இவ்வாறு போலியாக கோத்தபாய உள்ளிட்டவர்களை கைது செய்ய முயற்சிக்கப்படுகின்றது.

கடந்த அரசாங்க அதிகாரிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

இதனை விளங்கிக் கொண்ட அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏதேனும் ஒர் சட்டத்தைப் பயன்படுத்தி படையினரையும் ஏனைய அதிகாரிகளையும் சிக்கச் செய்ய முயற்சிக்கின்றனர்.

சட்ட மா அதிபர் யுவான்ஜித் , சட்டம் ஒழுங்கு முன்னாள் அமைச்சர் திலக் மாரப்பன, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச உள்ளிட்டவர்கள் அவன்ட்கார்ட் தொடர்பில் வழக்குத் தொடர முடியாது என தெளிவுபடுத்தியிருந்தனர்.

எனினும் பயங்கரவாத தடைச் சட்டம், ஆயுத சட்டம் மற்றும் நிதி மோசடி சட்டத்தின் கீழ் அவன்ட் கார்ட்டுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கோத்தபாயவும் அவரது மேலதிக செயலாளரும் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை, அவன்ட் கார்ட் நிறுவனத்துடன் ஒப்பந்த அடிப்படையில் செயற்பட்டுள்ளனர்.

பயங்கரவாதம் நிலவிய காலத்தில் கால்களுக்கு முகத்தை மறைத்துக் கொண்டு அஞ்சியிருந்தவர்கள் இன்று சிங்கங்களைப் போன்று சீறத் தொடங்கியுள்ளனர்.

அரசாங்கத்தின் இயலாமையை மூடி மறைப்பதற்கு இவ்வாறு அவன்ட் கார்ட் சம்பவம் பற்றி பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.

அரசாங்கம் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்ய முட்டாள்தனமாக தீமானித்தால், வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தப்படும் என முரத்தட்டுவே ஆனந்த தேரர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Related Post