முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா, மேல் மாகாண சபை அமைச்சர் உபாலி கொடிகார, தெஹிவளை – கல்கிஸை மாநகர மேயர் தனசிறி அமரதுங்க உள்ளிட்ட ஒன்பது பேர் நாளையும் நாளை மறு தினமும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவினரால் விஷேட விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக் ஷவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர்களை ஈடுபடுத்தியமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இவர்களுக்கு பாரிய ஊழல்கள், துஷ்பிரயோகங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ, மேஜர் ஜெனரல்களான பாலித்த பிரனாந்து, கே.பீ.கொடவெல, எம்.ஆர்.டப்ள்யூ.சொய்சா, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களான உபாலி கொடிகார, துமிந்த சில்வா, தனசிறி அமரதுங்க, ஜனக ரத்நாயக்க ஆகியோரே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக அந்த விசாரணை ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவித்தன.
ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர்கள் 550 பேரை தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தியமை, தேர்தலின் போது அந் நிறுவனத்தின் பணம் 86 லட்சம் பயன்படுத்தியமை தொடர்பில் இந் நபர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரக்ன லங்கா நிறுவனத்தில் வேலை பார்த்த 550 பேர் அங்கிருந்து அகற்றப்பட்டு அந்த வெற்றிடத்துக்கு சிவில் பாதுகாப்பு வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையும் அகற்றப்பட்டவர்கள் தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளமையும் விசாரணை ஆணைக் குழுவுக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரக்ன லங்கா நிறுவனத்தின் ஊழியர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர்கள் ஊடாக கோட்டை, கொலன்னாவை, தெஹிவளை, கடுவெல, மஹரகம ஆகிய பிரதேசங்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தியமை, ஊழியர்களின் வெற்றிடங்களுக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட சிவில் பாதுகாப்பு படையினரை பயன்படுத்தியமை, அவர்களுக்கு ரக்ன லங்கா சீருடை வழங்கப்பட்டமை, அரசாங்கத்திற்கு சொந்தமான ஆயுதங்களை உரிமை பத்திரமின்றி களஞ்சியப்படுத்தியமை உட்பட பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் இந்த 9 பேரிடமும் விஷேட விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு 800 முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட இரண்டாவது முறைப்பாடு இதுவென தெரிவிக்கப்படுகின்றது.