-ஊடகப்பிரிவு-
கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, பிறைந்துரைச்சேனை அல்/அஸ்ஹர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று (18) இடம்பெற்றது.
வாழைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர் எஸ்.தையூப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்துகொண்டார். அதிதிகளாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிஸின் வட்டாரக் குழுத் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது வாழைச்சேனை 206 பி (B), பிறைந்துரைச்சேனை 206சி (C), பிறைந்துரைச்சேனை 206ஏ (A) ஆகிய மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளிலுள்ள சிறிய தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கிராமிய பொருளாதார அமைச்சின் 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம், 214 பேருக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டது.
அந்த வகையில் ஓடாவி உபகரணம், மேசன் உபகரணம், இடியப்பம் அவிக்கும் உபகரணம், கேஸ் அடுப்பு உபகரணம், மண் வெட்டி, மீனவர் காப்பக மேலங்கி, எண்ணெய் தெளிக்கும் கருவி, தண்ணீர் பம், மீன் பெட்டி உட்பட்ட பல உபகரணங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.