-கல்குடா முர்ஷித்-
2017ம் ஆண்டு முடிவடைந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் சித்தி பெற்ற அனைத்து உள்ளங்களையும் வாழ்த்துவதில் பெருமையடைவதாக கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.
தற்போது வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் தொடர்பாக வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில்!
இலங்கையில் தற்போது வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி பல்வேறு மட்டங்களில் மாணவர்களின் தேர்ச்சி அடைவு மட்டம் அதிகரித்து காணப்படுவது மிகவும் சந்தோசத்தை தருகின்றது.
அந்த வகையில் அகில இலங்கை ரீதியில் பத்து இடங்களை பெற்ற மாணவர்களை வாழ்த்துவதுடன், அகில இலங்கை ரீதியில் ஏழாம் இடத்தையும், தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தையும் பெற்று சிறுபான்மை சமூகத்திற்கு பெருமை சேர்த்து தந்த யாழ்ப்பாணம் வேம்படி உயர் மகளீர் கல்லூரி மாணவி சுரேஷ்குமார் மிருதி என்பவருக்கு எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இம்முறை எழுபது வீதத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்று உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதுடன், ஒன்பதாயிரத்து மேற்பட்ட மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் ஒன்பது ஏ சித்திகளைப் பெற்றிருப்பது கல்வி வளர்ச்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.
இதேவேளை இலங்கையில் வாழும் தமிழ், முஸ்லிம் பகுதியில் சித்திகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிப்பதில் நான் பெரிதும் மகிழ்ச்சி கொள்கின்றேன். சித்தி பெற்ற மாணவர்கள் மூலம் எமது சிறுபான்மை சமூகம் கல்வியிலும் முன்னேற்றிச் செல்கின்றது என்பதை காட்டுகின்றது.
எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள பாடசாலைகளில் அதிக மாணவர்கள் திறமையான சித்திகளைப் பெற்றுள்ளது எனது அரசியல் வரலாற்றில் நான் எதிர்பார்த்த கல்வி வளர்ச்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதுகின்றேன்.
ஆகவே சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் உயர் தரத்திலும் தகுதி சித்தி பெற்று பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகி சிறந்த கல்வியாளராக திகழ இறைவனை பிரார்த்திப்பதுடன், சாதாரண சித்திகளை பெற்ற மாணவர்களும் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெறும் வகையில் தங்கள் கல்வியை மெருகூட்ட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.