சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து செல்பி (selfie) படங்களை பதிவேற்றுபவராக நீங்கள் இருந்தால், நீங்கள் நிச்சயம் உங்களது மேல் அதிகாரியால், ஆளுமை மீது சந்தேகம் கொண்டவராய் பார்க்கப்படுவீர்கள் என்கிறது ஒரு ஆய்வு.
அமெரிக்காவின் ஜோர்ஜியா பல்கலைக்கழக தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் செல்பி எடுப்பவர்களின் நோக்கம் குறித்த ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டனர்.
இந்நிலையில், செல்பி பழக்கம் இரண்டு முக்கிய தகவல்களை வெளிப்படுத்துவதாக உள்ளது.
ஒன்று நார்சிஸ (தன் உடல் மீது ஆர்வம்) நோக்கம் கொண்டவர்கள் செல்பி மீது அதிக ஆர்வமாக இருக்கின்றனர். அவர்கள் தங்களது இயல்பைத் தாண்டிய மேம்படுத்திய தோற்றத்தை இதன் மூலம் வெளிப்படுத்த விரும்புகின்றனர்.
இதனை அடுத்து எதற்காக செல்பி பயன்படுகிறது என்று ஆராய்ந்ததில், மனிதவள மேம்பாட்டாளர்களை பொறுத்தவரை இவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக வேலைக்காக ஆட்களைத் தேர்வு செய்யும் போது சமூக வலைத்தளங்களில் கொண்டிருக்கும் செல்பிக்கள் மூலம் அவர்களது இயல்பை தெரிந்து கொள்ள முடிவதாக மனிதவள ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.
ஆராய்ந்து பார்த்ததில் இப்படி செல்பிக்களை அடிக்கடி பதிவேற்றும் மனிதர்கள் பலர், தங்களது ஆளுமையை வெளிப்படுத்துவதில் தோற்றுவிடுவதாக அவர்கள் கூறி உள்ளனர்.
தொழில் முனைவோரான க்ரோவ்ஃபோர்ட் என்பவர் இது குறித்து கூறும்போது, “உங்களுக்கு வேலை வழங்குபவர் பல கோணங்களில் உங்களை ஆய்வு செய்வார். செல்பிக்களை அதிகம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்புபவரை, ஆளுமை மீது நம்பிக்கை கொள்ளாத – வெளித்தோற்றத்தின் மூலம் மட்டும் அனைத்தையும் எதிர்க்கொள்பவராக பார்க்கப்படுவார்.
செல்பி மீது ஆர்வம் கொண்டவர்கள் இயல்பாகவே கூட்டு முயற்சியில் ஈடுபாடு இல்லாதவராகவும் சுய கட்டுப்பாடு அற்றவர்களாகவும் இருக்கின்றனர்” என்றார்.
மேலும், ஒருவேளை பணியில் இருந்துகொண்டே, செல்பீக்களை எடுத்து பதிவேற்றுவதால் நிச்சயம் அவர்கள் அந்த நிறுவனத்தின் மேல் அதிகாரியால் சந்தேகப் பார்வையோடு அணுகப்படுவார்கள் என்கிறது இந்த ஆய்வின் முடிவு.