மலரும் புனித நோன்புப் பெருநாளில் சகல இன மக்களினதும் மன நிம்மதிக்காக பிரார்த்தனை செய்கிறேன். சகலரும் நிம்மதியான, சந்தோசமான வாழ்வை இந்த புனித தினத்தில் அடைய வேண்டுமென்பதே எனது பேரவா ஆகும். என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தனது நோன்புப் பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்…
பல்லின சமூக கட்டமைப்பைக் கொண்ட எமது இலங்கைத்திரு நாட்டில், சகல இன மக்களும் இன பேதங்களைக்கடந்த, ஒற்றுமையுடனும்,பரஸ்பர விட்டுக்கொடுப்புடனும், புரிந்துணர்வுடனும் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.
அந்த பயிற்சியை கடந்த ஒரு மாத கால நோன்பு முஸ்லிம்களுக்கு புகட்டியுள்ளது. அடுத்தவரின் பசியினையும்,தாக்கத்தினையும் புரிந்து கொள்ளும் பொருட்டும், தன்னை சுய கட்டுப்பாடுள்ள மனிதாக எல்லாவிதமான ஆசாபாசங்களையும் அடக்கி வாழுகின்ற ஆன்மீக பயிற்சியினை புனித ரமழான் வழங்கியுள்ளது.
அந்த பயிற்சியினை நாம் நமது அன்றாட நடை முறை வாழ்க்கையில் பிரயோகிக்க வேண்டும். அதன் போதே நாம் நோற்ற நோன்பின் உண்மையான பலனை அடையமுடியும்.
கடந்த ரமழானில் பெற்ற பயிற்சியினை ஒவ்வொறு முஸ்லிமும் தனது அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடித்து, அடுத்த சமூகத்திற்கு முன்மாதிரியான நடைமுறையில் நடந்து கொள்ள வேண்டும். மனதிற்குள் இருக்கின்ற துர்க்குனங்களை அகற்றி, அடுத்தவர்களை மதிக்கின்ற, நேசிக்கின்ற ஒரு மனிதாக நாம் வாழ சபதமெடுத்துக் கொள்ள வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் நமக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளை நினைவு படுத்தியவர்களாக,நாம் அன்றாடங்களை கழிக்க வேண்டும்.
புனித நோன்புப் பெருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது மனம்மார்ந்த பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் கூறினார்.