Breaking
Tue. Jan 28th, 2025
இந்நாட்டு பல்கலைக்கழகங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளிட்ட சகல கல்வி நிறுவனங்களும் நல்லிணக்கத்தின் கேந்திர நிலையங்களாக மாற்றமடைதல் வேண்டுமெனவும் பாடசாலைகளின் பாடத்திட்டங்களில் நல்லிணக்கம் எனும் பாடம் உள்ளடக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் பற்றி குறிப்பிட்ட ஜனாதிபதி, தான் இதனையிட்டு கவலையடைவதாகவும் அவ்வாறான மோதல்கள் ஏற்படாதவாறு எமது சகல கல்வி நிலையங்களையும் மீண்டும் சீர்செய்யவேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

சுமார் 8 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் ஜேர்மன் அரசாங்கத்தின் உதவியில் கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று (18) கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம்திகதி இந்நாட்டு மக்கள் தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தமைக்கான காரணம், தான் முன்வைத்த கொள்கைப் பிரகடனமாகுமெனத் தெரிவித்த ஜனாதிபதி இக்கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட அனைத்து விடயங்களையும் பூர்த்தி செய்வதற்காக எந்தவித தயக்கமும் இன்றி அர்ப்பணிப்புடன் செயற்படுவாதாக குறிப்பிட்டார்.

இந்த நாட்டில் வாழும் ஏனைய இனத்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைத்தால் மாத்திரமே சிங்கள பௌத்த மக்கள் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ முடியுமெனத் தெரிவித்த ஜனாதிபதி வடக்கு மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளதென்பதை உண்மையாக ஏற்றுக்கொள்ளல், இப்பிரச்சினைகளை தீர்க்கும் முதலாவது படி முறையாகும் எனத் தெரிவித்தார்.

தெற்கில் பத்திரிகை மாநாடுகளை நடத்தி ஊடக வீரர்களாக மாற முயற்சிப்பவர்களை வடக்கு கிழக்கிற்கு வந்து அங்கு வாழும் மக்களின் பிரச்சினைககளை செவிமடுக்குமாறும் அவர்களது பிரச்சினைகளை புரிந்து கொள்வதற்கு முயற்சிக்குமாறும் தான் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். புதியதொரு அரசியலமைப்பினை உருவாக்குவதன் மூலம் நாட்டை கூறுபோடுவதற்கு அன்றி ஒரேநாட்டில் இரண்டாகப் பிரிந்துள்ள மக்களை ஒன்றிணைத்து ஒரேநாட்டை கட்டியெழுப்புவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் புதிய அரசியல் தலைமைகள் உருவெடுத்தமையினை நினைவுகூரக் கூடியதாக உள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அவ்வாறான அரசியல் சக்திகள் மீண்டும் உருவாக வேண்டுமாயின் அதற்கு இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உட்படாதவர்களாகவே இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். ஆகையால் பலத்த குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பதன் நோக்கம் மீண்டும் இலஞ்ச ஊழல்களை ஏற்படுத்துவதற்கா என்ற கேள்வி எழுவதாகவும் தெரிவித்தார்.

தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து இலங்கையிலிருந்து தனது நாட்டிற்கு புறப்பட உள்ள ஜேர்மன் தூதுவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த ஜனாதிபதி இத் தொழிற்பயிற்சி நிறுவனத்தை நிர்மாணித்தல் உள்ளிட்ட ஜேர்மன் அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்களை மிகச்சிறந்த முறையில் வழிநடாத்துவதற்கு அவர் வழங்கிய ஒத்துழைப்புக்காக விசேட நன்றிகளைத் தெரிவித்தார்.

இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தை திறந்து வைக்கும் நிகழ்வின் அடையாளமாக ஜனாதிபதியினால் இங்கு வேப்பமரக்கன்று நடப்பட்டதுடன் ஜனாதிபதி தொழிற்பயிற்சி நிறுவனத்தின் செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சித்தலைவர் ஆர்.சம்பந்தன், அமைச்சர் மஹிந்த சமரசிங்க, வடமாகாணஆளுநர்ரெஜினோல்குரே, ஜேர்மன் தூதுவர் Dr.JuergenMorhard உள்ளிட்ட இராஜதந்திரிகள், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

By

Related Post