வவுனியா ஸ்ரீபோதி தக்க்ஷினாராமய விகாரையின் விகாராதிபதியும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான சங்கநாயக்க தேரருமான, சியம்பலகஸ்வேவ விமலசார தேரர் சுகயீனமுற்றுள்ளார். அவரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான கௌரவ ரிஷாட் பதியுதீன் நேரில் சந்தித்து சுகம் விசாரித்துள்ளார்.
இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வில்பத்துக் காட்டை அழிக்கிறார். அங்கு முஸ்லிம்களைக் குடியேற்ற முயற்சிக்கிறார், வன்னியில் அரபு தேசம் ஒன்றை உருவாக்கவும் அவர் முயற்சிக்கிறார் என்று, உண்மைக்குப் புறம்பான இட்டுக்கட்டுகளைச் சுமத்தி, கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் தேரர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் எனது நினைவுக்கு வருகிறது.
அமைச்சர் ரிஷாத்தின் அமைச்சுக்குள் பலாத்காரமாகப் புகுந்து சல்லடைத் தேடுதல் நடத்திய தேரர்களையும் ஒரு தரம் நினைத்துப் பார்க்கிறேன்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் காடுகளை அழிக்கிறார் எனத் தெரிவித்து, தெற்கிலுள்ள சிங்கள இனவாத சக்திகளுடன் கைகோர்த்து வில்பத்துக்குச் சென்ற பௌத்த தேரர்களும் என் கண்முன் வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில், அமைச்சர் ரிஷாட், சுகயீனமுற்றுள்ள வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கான சங்கநாயக்க தேரரைச் சந்தித்து, அவரது சுகம் விசாரிப்பது மனதை நெகிழச் செய்கிறது.
ஓர் இனத்தை அல்லது மதத்தைச் சேர்ந்த சிலரின் தவறான செயற்பாடுகளுக்கு, அந்த இனத்தை அல்லது மதத்தைச் சேர்ந்த அனைவரும் பொறுப்பானவர்கள் அல்லர் என்பதனை அமைச்சர் அவர்கள் இங்கு சொல்லாமல் சொல்லிக் காட்டியுள்ளார்.
அமைச்சரின் இந்த உயரிய குணம் எல்லோருக்கு வருமா என்பதும் எனக்குள் எழுந்துள்ள சந்தேகமே!
குறித்த புகைப்படமானது அமைச்சர் ரிஷாட் அவர்களின் உணர்வுபூர்வமான முகபாக மாற்றம், தேரரின் சுகயீன வேதனையை எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதனையும் உணர்த்தி நிற்கிறது.
-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-