சிறுபான்மை மக்களின் அதிபெரும்பாலானோர் ஆதரிக்கும் சஜித் பிரேமதாசவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அந்த மக்களின் வாக்குகளை சஜித்துக்கு செல்லவிடாமல் தடுப்பதற்கான பாரிய சதியொன்று அரங்கேற்றப்படுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
வாழைச்சேனையில் நேற்று(01) சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்,
அவர் கூறியதாவது,
அரபிகளின் வாகனமே ஒட்டகம் எனக் கூறிக்கொண்டு அரபிகளின் பணத்தை வாரி வீசி ஒருவர் களமிறங்கியுள்ளார். தான் போகுமிடம் எல்லாம் கேள்வி பதில் என்ற போர்வையில் பல வியாக்கியாணங்களை வழங்குகின்றார். சஜித்தை ஆதரிக்கும் முஸ்லிம் தலைமைகளை விமர்சிக்கின்றார். அவரது செயற்பாடுகள் அனைத்தும் எதிரணி வேட்பாளரை பலப்படுத்தும் செயலென வெளிப்படையாகவே தெரிகின்றது. கொழும்பில் இருக்கும் மற்றுமொரு முஸ்லிம் அரசியல் புதுசுகள் இஸ்லாமிய சமுதாயத்தின் காவலர்கள் தாங்களே என வெட்கமில்லாமல் கூவித்திரிகின்றனர்.வட-கிழக்கு மண்ணை இவர்கள் என்றைக்குமே மிதித்தவர்களும் அல்ல. அந்த மக்களின் கஷ்டங்களை அறிந்திராதவர்கள். துன்பங்களுக்கு உதவாதவர்கள். இப்போது புதியதொரு கொந்தராத்தை எடுத்துக்கொண்டு கோட்டாவை வெல்ல வைப்பதற்காக களமிறங்கியுள்ளனர் முஸ்லிம்களின் நாடிகளை பிடித்துப்பார்க்கின்றனர். தமக்கு வழி போக மாட்டார்கள் என்று தெரிந்ததால் அச்சுறுத்தி அச்சுறுத்தி வாக்கு கேட்கின்றனர். கோட்டாவின் சுபாவங்களை எடுத்துக்கூறி பயமுறுத்துகின்றனர். தேர்தல் நடப்பதற்கு முன்னரே கோட்டாதான் வெற்றிபெறுவார் என்றும் இப்போதே வெற்றிபெற்ற மாதிரிதான் எனக் கூறி பயமுறுத்துகின்றனர்.
ஒட்டக வேட்பாளரின் ஊரைச் சேர்ந்த இன்னுமொரு சாரார் வெல்ல முடியாது எனத் தெரிந்தும் மூன்றாம் தரப்பினர் ஒருவருக்கு வாக்குச் சேகரிக்கும் நிகழ்ச்சியில் ஈடுபடுகின்றனர். அதுமாத்திரமின்றி இவர்களுக்கு எல்லாம் துணை செய்யும் நோக்கில் சில வலைத்தளங்கள் சஜித்தை இலக்கு வைத்து கோட்டாவை வெல்ல வைப்பதற்காக அபாண்டங்களை பரப்புகின்றனர். ஊடக தர்மத்தை மீறி இவர்கள் செயற்படுகின்றனர். கூலிக்கு மாராடிக்கும் இவ்வாறனவர்கள் எப்படியாவது முஸ்லிம்களின் மனதை மாற்றி கோட்டாவுக்கு வாக்குச் சேகரிக்க முயல்கின்றனர், இத்தனைக்கு மேலாக சாய்ந்தமருது பிரச்சினையை மையமாக வைத்து அந்தக் கிராமத்தவர்கள் அனைவரும் கோட்டாவின் பின்னால் இருப்பதாக ஒரு பிரமை காட்டப்படுகின்றது. அதேபோன்று கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட்டு மொட்டுக் கட்சியினருடன் இணைந்து ஆட்சி செய்யும் அக்குறணை சுயேச்சை குழுவொன்று புதிதாக பெரமுனவுக்கு ஆதரவளிப்பதாக மக்களின் ஒரு புதிய கதையை சோடித்துள்ளது.
இவ்வாறு நமது சமுதாயத்தின் வாக்குகளை சிதைத்து எதிர்காலத்தை கேள்விக்குறியாகும் சதித்திட்டத்தின் மத்தியிலே நாங்கள் இந்த தேர்தலின் மகிமைய உணர்ந்துகொள்ள வேண்டும். மிகவும் தைரியமாக இதனை முகம் கொள்ள வேண்டும் இதில் தோல்வியடைந்தால் இனவாதம் வெற்றியடைந்த்தாகிவிடும் மதவாதிகளின் கை ஓங்கும் அவர்களின் அராஜகம் மீண்டும் தலை தூக்கும். எனவே, நாம் சிந்தித்து இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும். என்றார்.
இந்த பொதுக்கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர் அமீர் அலி உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் உரையாற்றினார்கள்.