Breaking
Mon. Dec 23rd, 2024

சட்டக் கல்லூரி அனுமதி – 2016 கல்வியாண்டுக்கான போட்டிப் பரீட்சையில்
தமிழ்மொழி மூல பரீட்சார்த்திகளில் கணிசமான தொகையினருக்கு அப்பட்டமாக
அநீதி இழைக்கப்பட்டு உள்ளது.

கடந்த சனிக்கிழமை இப்பரீட்சை கொழும்பில் இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு
அடங்கலாக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தமிழ் பேசும்
பரீட்சார்த்திகள் பரீட்சை எழுத வந்திருந்தனர்.

சட்டக் கல்லூரி அனுமதியில் கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக தமிழ்
பேசும் பரீட்சார்த்திகளுக்கு திட்டமிடப்பட்ட புறக்கணிப்பு, அநீதி
இடம்பெறுகின்றது என்று பரவலாக விமர்சிக்கப்படுகின்றது. இவை சம்பந்தமாக
பரீட்சார்த்திகள் சிலர் மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம்
ஆகியவற்றில் கடந்த காலங்களில் வழக்குகள் தாக்கல் செய்தனர்.

கொழும்பு – 05 இல் உள்ள சென். போல்ஸ் பாலிக வித்தியாலயமும் பரீட்சை
நிலையங்களில் ஒன்றாகும். கடந்த சனிக்கிழமை இக்கல்லூரியின் நடை பவனி விழா
வெகுவிமரிசையாக காலை முதல் இடம்பெற்றது. கல்லூரி மாணவிகள் மாத்திரம்
அன்றி பெற்றோரும் இவ்விழாவுக்கு வந்து இருந்தனர்.

இதனால் பாடசாலைக்கு உள்ளே மாத்திரம் அன்றி வெளியேயும் கூட்டம் திரண்டு
காணப்பட்டது. பாடசாலை முன்றலில் குதிரை வண்டி ஒன்றும் பவனிக்காக வந்து
காத்து நின்றது.

பரீட்சை நேரம் 10. 00 மணி. பரீட்சார்த்திகள் பலரும் 8. 00 மணி முதல்
பரீட்சை நிலையத்துக்கு வருகை தந்த வண்ணம் இருந்தனர். கடுமையான மழைக்கு
மத்தியில் வந்து கொண்டிருந்த இவர்களை பாடசாலையின் நடை பவனி விழாக்
கூட்டம் பேரதிர்ச்சிக்கு உட்படுத்தியது.

பரீட்சார்த்திகள் பகீரத முயற்சிகளை தொடர்ந்து உள்ளே நுழைந்து பரீட்சை
மண்டபங்களை கண்டு பிடித்தனர். ஆனால் பரீட்சை மண்டபங்களை அண்டிய
மண்டபங்களிலும், சுற்றாடலிலும் விழாவீல் பங்கேற்க வந்திருந்த மாணவிகளும்
திரண்டு காணப்பட்டனர்.

இவர்களின் சத்தம் ஆரவாரமாக காணப்பட்டது. ஒலிவாங்கிகள் விழாவில்
பயன்படுத்தப்பட்டன. பரீட்சை ஆரம்பம் ஆன பிற்பாடும் ஏறத்தாள அரை
மணித்தியாலத்துக்கும் மேல் ஒலி வாங்கிப் பாவனை இடம்பெற்றது. விழாவில்
பங்கேற்ற மாணிவிகளின் உற்சாக கோஷங்கள் ஒலிவாங்கியில் ஒலிக்க விடப்பட்டன.

பரீட்சை மேற்பார்வையாளர்களையும் இச்சூழல் ஒரு வகையில் பாதித்துத்தான்
இருந்தது. மாணவிகளை கட்டுப்படுத்த முடியாது என்று இவர்கள் பரஸ்பரம்
பேசிக் கொண்டனர்.

பரீட்சையின் முதல் பாடம் பொது அறிவும், பொது விவேகமும் ஆகும். இதில்தான்
பெரும்பாலான பரீட்சார்த்திகள் சறுக்குகின்றமை வழக்கம். இப்பரீட்சைக்கு
பொது உளச் சார்பு என்றும் பெயர் உள்ளது. ஏனென்றால் இது உள்ளம்
சம்பந்தப்பட்ட பரீட்சை.

பாடசாலை விழா காரணமாக உள்ளம் பாதிக்கப்பட்ட நிலையிலும், ஒலி
இடையூறுகளுக்கு மத்தியிலுமே பரீட்சார்த்திகளால் பரீட்சை எழுத முடிந்தது.

பொதுவாக பாடசாலைகள் பரீட்சை நிலையங்களாக பிரகடனப்படுத்தப்படுகின்றபோது
பரீட்சைத் தினத்தில் இப்பாடசாலைகளில் வகுப்புக்கள்கூட நடத்தப்படக்
கூடாது, விழாக்கள் நடத்தப்பட முடியாது. குறிப்பாக ஒலிவாங்கிப் பாவனைக்கு
முற்றிலும் தடை. க. பொ. த உயர் தரப் பரீட்சை இதற்கு வழக்கமான உதாரணம்.

இந்நிலைமைகளில் நாட்டின் மிக கடுமையான பரீட்சைகளில் ஒன்றான சட்டக்
கல்லூரி அனுமதி நுழைவுப் பரீட்சையில் நேர்ந்த சம்பவம் அசட்டையாக விட்டு
விடக் கூடிய சிறிய விடயம் அல்ல.

இப்பரீட்சையை நடத்துகின்ற பரீட்சைகள் திணைக்களம் பொறுப்பற்ற விதத்தில்
தவறு இழைத்து உள்ள நிலையில் நீதி பெற்றுத் தரப்பட வேண்டும் என்று
தமிழ்மொழி மூல பரீட்சார்த்திகள் கோருகின்றனர்.

இது சம்பந்தமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும்,
இராஜாங்கத் துறை முன்னாள் அமைச்சருமான ஹசன் அலிக்கு பரீட்சார்த்திகளில்
ஒரு தொகையினரால் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

Related Post