Breaking
Mon. Dec 23rd, 2024

நாட்டில் எந்தவொரு பிரஜையும் , அரசியலமைப்பை மீறமுடியாது என்பதை இன்றைய வரலாற்று முக்கியத்துவமிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு நிரூபித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புக்கு மாற்றமான முறையில் ஜனாதிபதி செயற்பட தொடங்கியதிலிருந்து,  அது பிழையென நிரூபிக்கும் வகையில், நாங்கள் நீதிமன்றத்தின் ஊடாக மேற்கொண்ட முயற்சிகளுக்கு இன்று உரிய பலன் கிடைத்துள்ளது. சட்டம் தனது கடமையை மிகச் சரியாக செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

கடந்த நவம்பர். 12ஆம் திகதி உச்ச நீதிமன்றம் பாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக வழங்கிய இடைக்கால தடையுத்தரவு மூலம் ஜனநாயகத்தை விரும்பும் மக்களுக்கு ஓரளவு நிவாரணமும் நிம்மதியும் கிடைத்தது.  அதன் தொடர்ச்சியாக இன்றைய சரித்திரம் வாய்ந்த தீர்ப்பானது ஜனநாயகத்திற்கான பூரண வெற்றியெனவே நாம் கருதுகின்றோம். நீதிமன்றத்தில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஜனநாயக வெற்றிக்காகவும் நீதிக்காவும் போராடியது. அந்த வகையில் அரசியலமைப்புச் சட்டமானது நீதிமன்றத்தால் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்  சிறுபான்மை மக்களுக்கும் பாதுகாப்பு கிடைத்துள்ளதாகவே நாம் உறுதியாக நம்புகின்றோம்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு மதிப்பளித்து ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இனியும் காலம் தாழ்த்தாது ஐ.தே. கட்சியின் தலைவர் ரணில் விகரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கி, ஒக்டோபர். 26ஆம் திகதிக்கு முன்னரான நிலையை உருவாக்கி தற்போதைய அரசியல் நெருக்கடிக்கும் உடனடியாக தீர்வை காண வேண்டும். 

ஜனநாயகத்தை வெற்றிகொள்வதற்கான இந்த போராட்டத்திற்கு ஒத்துழைத்தவர்களுக்கும், எமது வேண்டுகோளை ஏற்று இறை பிரார்த்தனையில் ஈடுபட்டவர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிக்கின்றேன்.

ஊடகப்பிரிவு

Related Post