Breaking
Sun. Jan 12th, 2025

பழுலுல்லாஹ் பர்ஹான்

சட்டம் எமது அன்றாட வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளது. தெரிந்தோ தெரியாமலோ நாளாந்தம் எமது வாழ்க்கையினை சட்டத்தின் அடிப்படைகளை அறிந்து கொண்டு நடாத்திச் செல்கிறோம். சட்டமென்பது சமுகத்தை கட்டுப்படுத்தும் முறைமை என்பதால் எவரும் மட்டுப்படுத்த முடியாது. சட்டம் பற்றிய அறிவு எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பது பொதுவான கோட்பாடாகும்.

சட்டம் பற்றித் தெரியாது என்பது குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு மன்னிப்பளிக்காது என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

சர்வதேச உளவியல்சார் கற்கை நிலையத்தினால் மனநல தினத்தை முன்னிட்டு, அதன் தலைமைக் காரியாலயத்தில் திருமதி. பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற வைபவத்தின் போது அதிதியாக கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அஸீஸ் மேலும் தெரிவிக்கையில்,

இன்று குற்றத்தினைச் செய்பவர்கள் மனநிலை பாதிப்பினாலேயே அக்குற்றத்தை செய்தாக கூறுகின்றனர். இது ஒரு போதும் குற்றத்திலிருந்து விலக்களிப்புச் செய்யக் காரணமாக அமையாது. ஆனால் அறியாமை காரணமாக சிலர் சட்டத்தை மீறுவதால் அதன் பிடிக்குள் சிக்கிவிடுகின்றனர்.

இதனால் தண்டணை பெறுபவர்கள் சமுகத்திலிருந்து தூரமாக்கப்படுகின்றனர். ஆகையினால் நாம் அனைவரும் சட்டம் பற்றிய சகல விடயங்களையும் கற்றுக் கொள்ள வேண்டிய கடற்பாட்டிற்குள்ளாகிறோம்.

சட்டத்தை தெரிந்து கொள்வதற்குரிய சந்தர்ப்பங்கள் அதிகமாக இருந்தும் அவற்றை பொது மக்கள் அறி;ந்து கொள்வதில் சிரமங்கள், நடைமுறைப் பிரச்சினைகள் காணப்படுகிறது. அத்துடன் போதியளவு அக்கறை காட்டுவதில்லை. குற்றத்திற்கான தண்டனைகள் சிறைச்சாலைகளில் வழங்கப்படுகின்ற போது சிறைவாசம் அனுபவிப்பவர்கள் உளரீதியான தாக்கத்திற்குள்ளாவதைத் தவிர்க்க முடியாது.

சட்டமானது சமுக மதிப்புகளையும், சமுகத்தில் வாழ்கின்ற மக்களின் நம்பிக்கைகளையும் பிரதிபலிக்கும் ஒன்றாக இருக்கின்றது.

சமூக நன்மைகள் மாற்றமடைவது போல் சட்டமும் மாற்றமடையும். காலத்தின் தேவை கருதி புதிய சட்ட திட்டங்கள் வருவது வரவேற்கத்தக்கது. இது மக்களின் நலன்களை மையப்படுத்தியே கொண்டு வரப்பட வேண்டும்.

சட்டமானது அனைவருக்கும் சமனான வகையில் ஏற்புடையது, ஆனால் எவருக்கும் விதிவிலக்கு வழங்கப்படக்கூடாது. அவ்வாறு இருந்தால் மாத்திரமே சட்டத்தின் குறிக்கோளாகிய நீதியை அடைதல் என்ற விடயத்தில் நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்படும்.

சட்டம் சமூகத்தின் மக்களின் நடத்தையை கட்டுப்படுத்த பொதுவாக அரசியலமைப்பு, சட்டவாக்கங்கள், நீதித்துறை விளக்கங்களை அல்லது ஒழுங்கமைப்பதற்காக அதிகார பூர்வமான விதிகள் அல்லது ஒழுங்கு முறைகளின் தொகுப்பு என வரையறுக்க முடியும். பொதுவாக சட்டமென்பது சமுகத்தை கட்டுப்படுத்தும் ஒரு முறைமை.

இலங்கையில் சட்டமானது மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றத்தால் இயற்றப்படுகின்ற நியதிச் சட்டங்களையும், வழக்காறுகளையும், நீதிமன்றங்களால் வழங்கப்படும் முத்தீர்ப்புக்களையும் மூலங்களாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றது.

இலங்கை ஒரு பன்மைத்துவ நாடு என்பதால் பல சமயங்கள், பல இனங்கள் இருப்பதால் பல்வேறு சட்டங்கள் நிலவுகின்றன. பொதுவான அரசியலமைப்புச் சட்டம் ஒரு நாட்டின் கண்ணாடி என வர்ணிக்கப்படுகிறது. அத்துடன் தனியார் சட்டங்கள் எமது நாட்டில் இன்னமும் வலுவில் உள்ளது என மேற்கண்டவாறு அஸீஸ் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது மனநல தினத்தையொட்டி அகில இலங்கை ரீதியாக நடாத்திய கட்டுரை, கவிதைப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்கள் உளவியல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Related Post