அமைச்சரின் ஊடகப்பிரிவு
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்பின் பேரில் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் தரச்சான்றிதழ் அனுமதி பெறாது நிட்டம்புவ, பணாவலவில் சட்டத்துக்கு முரணாக இயங்கி வந்த தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றை திடீர் சுற்றிவளைப்பு செய்த நுகர்வோர் பாதுகாப்பு சபை அதிகாரிகள் அதனை மூடி சீல் வைத்துள்ளனர்.
இன்று காலை (9) தகவலொன்றின் அடிப்படையில் அந்தத் தொழிற்சாலையை முற்றுகை செய்த நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் தரச்சான்றிதழ் அனுமதி பெறாது நடாத்தப்பட்டு வந்த அந்தத் தொழிற்சாலையில் 28080 தீப்பெட்டிகளை கைப்பற்றியதோடு தொழிற்சாலையையும் மூடி சீல் வைத்தனர்.
2012 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் வர்த்தமானி பிரகடனத்தின் விதிமுறையின் கீழ் இந்தத் தொழிற்சாலையை மூடி சீல் வைத்துள்ளதாக அதிகாரசபையின் தலைவர் ஹஸித திலகரத்ன தெரிவித்தார்.
தொழிற்சாலையின் உரிமையாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உரிமையாளர் மார்ச் 17 ஆம் திகதி நீதிமன்றத்தின் முன் ஆஜர் செய்யப்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை வத்தள ஹேக்கித்தவில் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் தரச்சான்றிதழை சரியாகப் பேணாத உருக்கு தொழிற்சாலை ஒன்றை மூடி சீல் வைத்துள்ள நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள், விளம்பரத்திற்கு முரணான வகையில் உருக்குக் கம்பியின் அளவை மாற்றி விற்பனையில் இந்த நிறுவனம் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
10மிமீ, 12மிமீ, 16மிமீ என்ற அளவுகளிலான உருக்குக் கம்பிகள் விற்பனை செய்யப்படுவதாக விளம்பரப்படுத்தி 12மிமீ அளவிலான உருக்கை மாத்திரம் வியாபாரிகளுக்கு ஏமாற்றி விற்றதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனை உறுதிப்படுத்த உருக்குக் கம்பிகளின் மாதிரிகள் கட்டளைகள் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர்களின் அறிவிப்பு கிடைத்த பின்னர் சட்ட நடவடிக்கை தொடர்பில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுமென அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.