Breaking
Wed. Jan 15th, 2025

தனது சிறுவயது முதலே பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து, அதனை எதிர்த்துப் போராடி, இன்று தமிழ் பேசும் மக்களின் சிறந்த தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, சொந்த மண்ணை விட்டு இடம்பெயர்ந்து, கல்வியிலும் சிறந்து விளங்கிய முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வன்னி பிரதேசத்திற்கு கிடைத்த மிகச் சிறந்த ஆளுமை மிக்க ஒரு தலைவர்.

மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் பின்னர், எமது முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத்த சிறந்ததோர் அரசியல் தலைவர்களில் ஒருவராக காணப்படுகின்றார் என்றால் அது மிகையில்லை.

2001 ஆம் ஆண்டு முதல் இன்று வரை, பாராளுமன்ற உறுப்பினராக அவரது சேவைகள் கட்சி, இன, மத பேதங்களின்றி, வேற்றுமையின்றி நாடு பூராகவும் வியாபித்து நிற்கின்றது.

இருந்த போதிலும், அவரது பரந்துபட்ட சேவைகளை பொறுக்கமுடியாத சிலரினால் அன்றுதொட்டு இன்றுவரை, அவரை வீழ்த்துவதற்கான சதிவலைகள் பின்னப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. இவருக்கு எதிரான செயற்பாடுகள் இன்று நேற்று ஆரம்பித்ததல்ல.

அரசியல் காழ்ப்புணர்வு கொண்டோர்களும், பேரினவாதிகவும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டிற்கு எதிரான பல பொய்யான, போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதற்கு இனவாத ஊடகங்களும் துணை நின்றன.

இவ்வாறு சென்று கொண்டிருந்த அவரின் அரசியலில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் கீழ், சுமார் 09 வருடங்கள் சிறந்த முறையில் அமைச்சராக இருந்தாலும், முஸ்லிம் சமூகத்திற்காக தனது அமைச்சுப் பதவியை தூக்கியெறிந்து, 2015 ஆம் ஆண்டு பொது எதிரணியில் இணைந்துகொண்டார். அன்றிலிருந்து இற்றைவரை அவருக்கு எதிரான சதிவலைகள் பின்னப்பட்டவண்ணமே உள்ளன.

“ரிஷாட் வில்பத்துக் காட்டை அழித்து, குடியிருப்புகளை ஏற்படுத்துகிறார்” என்ற பொய்யான செய்தியை பரப்பிய இனவாத ஊடகங்களால், பல பகிரங்கமான விவாதங்களுக்கு மத்தியிலும்கூட அதனை நிரூபிக்க முடியாது போனமையே நிதர்சனம்.

அத்துடன் ஓய்ந்துவிடவில்லை இந்தச் சதிகாரக் கூட்டம். ‘அவரை எப்படியாவது வீழ்த்திவிட மாட்டோமா?’ என்ற நப்பாசையில், தொடர்ச்சியாக பல போலியான குற்றச்சாட்டுக்களை அவரின் மேல் சுமத்திக்கொண்டே வந்தனர்.

இவ்வாறான பல பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுக்களை அவர் மீது திணித்த போதிலும், ஒரு குற்றத்தையேனும் காழ்ப்புணர்வு கொண்ட இனவாதிகளால் நிரூபிக்க முடியவில்லை என்பதே யதார்த்தம்.

இதேவெளை, ரிஷாட் பதியுதீனை வீழ்த்துவதற்கு தருணம் பார்த்துக் காத்திருந்த சதிகாரர்களுக்கு, ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த பயங்கரவாத குண்டுத் தாக்குதல் ஒரு காரணமாக அமைந்தது. பயங்கரவாதத் தாக்குதலுடன் அவரை தொடர்புபடுத்தி, வசைபாட ஆரம்பித்தனர். ஆனால், அந்த குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவர் குற்றமற்றவர் என பகிரங்கமாக நிரூபணமானமானது. சதிகாரர்களும் காழ்ப்புணர்வுகொண்ட கயவர்களும்
அவரை அரசியலிலிருந்து ஓரங்கட்டுவதற்காக எடுத்த அத்தனை முயற்சிகளிலும் தோற்றுப்போயினர்.

எப்போதெல்லாம் அவருக்கு எதிரான எதிர்ப்புக்கள் அதிகரிக்கின்றதோ, அப்போதெல்லாம் அவருக்கான ஆதரவும் மென்மேலும் அதிகரிக்கின்றது என்பதே மறுக்கமுடியாத உண்மை.

இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லிம்களுக்கும், தமிழ் பேசும் மக்களுக்கும் கிடைத்த மிகச் சிறந்ததோர் தலைமை ரிஷாட் பதியுதீன் என்றால் அது மிகையில்லை. அனைத்துப் பிரச்சினைகளிலிருந்தும் மீண்டு வருவதற்கு, அரசியல் பிளவுகளுக்கு அப்பால், அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து, அவரின் கரத்தை பலப்படுத்துவோம்.

ஆஷிக் முஹம்மத்

Related Post