-அமைச்சரின் ஊடகப்பிரிவு-
அரசாங்கத்துக்கு சொந்தமான சதொச நிறுவனத்தின் ஒரு பகுதியில் சதொச ஊழியர்களையும், பங்காளராக்கி நிறுவனத்தை மேலும் முன்னேற்ற உத்தேசித்துள்ளோம். அரசின் அனுமதி கிடைத்தவுடன் இந்த நடவடிக்கையை நாம் மேற்கொள்வோம் என கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
மன்னார் அடம்பனில் இன்று மாலை (04) சதொச நிறுவனக் கிளை அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சதொச நிறுவனத்தை நாம் பொறுப்பேற்ற போது, 1.5 பில்லியன் மாத வருமானமே இருந்தது. தற்போது, கடந்த வருட இறுதிக் கணக்கெடுப்பின் படி 3.5 பில்லியனாக அது அதிகரித்துள்ளது. 300 மில்லியன் நஷ்டத்தில் இயங்கிய சதொச நிறுவனத்தை இன்று இலாபமீட்டும் நிறுவனமாக நாம் மாற்றியுள்ளோம்.
ஒரு பிரதேசத்தில் சதொச நிறுவனங்களை ஆரம்பித்தால், அந்தப் பிரதேச வியாபாரிகள் கவலையடைவதோடு வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைவது சகஜமானதே. எனினும், மக்களின் நன்மை கருதியே அத்தியாவசியப் பொருட்களை சதொச நிறுவனத்தின் ஊடாக வழங்கி வருகின்றோம்.
நாட்டில் ஏற்பட்ட வறட்சி காரணமாக அரிசியின் விலை வெளியிடங்களில் 100 ரூபாவாக தற்போது அதிகரித்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிய முடிந்தது. தொடர்ச்சியான நாட்டின் அசாதாரண காலநிலை காரணமாக தேங்காய் உற்பத்தியிலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனினும், சதொச நிறுவனம் வெளிநாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்து பாவனையாளர்களுக்குத் தட்டுப்பாடின்றி விநியோகித்து வருகின்றது.
அந்தவகையில், நாட்டரிசி 70 ரூபாவுக்கும், பொன்னி அரிசி 71 ரூபாவுக்கும் தாராளமாக பெற்றுக்கொள்ள முடியும். தேவை ஏற்படின் தனியார் வியாபாரிகளுக்கும் நாங்கள் 24 மணி நேரத்துக்குள் அரிசியை விநியோகிக்க முடியும்.
அரசு மாட்டுமே மேற்கொண்டு வந்த அரிசி இறக்குமதியை, தனியாரும் இறக்குமதி செய்யும் வகையில் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை இது நடைமுறையில் இருக்கும்.
நாம் இந்த நிறுவனத்தைப் பொறுப்பேற்கும் போது, நாடளாவிய ரீதியில் 300 சதொச கிளைகளே இருந்தன. நாளை கொழும்பில் பிரதமரால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவிருக்கும் கிளையானது, நிறுவனத்தின் 400 ஆவது கிளையாகும். அதுமட்டுமின்றி நவீன வசதிகளுடன் கூடிய கிளையாக நாங்கள் ஆரம்பித்துவைக்கவுள்ள 45 கிளைகளில் இது முதலாவது கிளையாகும்.
கடந்த காலங்களில் சதொச நிறுவனத்தில் கையிருப்புக்கள் மேற்கொள்ளப்டுவதில்லை. தற்போது மேற்கொண்டு வரும் கையிருப்பின் மூலம் நஷ்டத்திற்கான காரணத்தை அறிந்து, ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம். இதிலிருந்து எவருமே தப்ப முடியாது.
ஒரு காலத்திலே சதொச நிறுவனத்தை மூட வேண்டிய துர்பாக்கிய நிலை இருந்த போது, கடந்த இரண்டு வருடங்களில் பாரிய மற்றங்களை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். அனைத்துக் கிளைகளுக்கும் கணணி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. சீ.சீ.டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஊழியர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன. தூர சிந்தனையுடன் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலே நாங்கள் வெற்றிகரமாக இந்தப் பயணத்தை தொடர்கின்றோம்.
நாடளாவிய ரீதியில் சுமார் 4௦௦௦ ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். அடுத்த வருட இறுதிக்குள் 500 கிளைகளை நாங்கள் நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளோம். இலாபமீட்டும் நோக்கத்தை விட மக்களின் விமோசனமே எங்களின் தாரக மந்திரமாகும்.
எனவே, சதொச ஊழியர்கள் மிகவும் நேர்மையாகவும், கடமையுணர்வுடனும், பொறுப்புடனும் செயற்பட வேண்டும். இதன் மூலமே இந்த நிருவனத்தை நாம் மேலும் கட்டியெழுப்ப முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.