Breaking
Sat. Jan 11th, 2025

எல்லோரும் எதிர்பார்த்தது போல மாகாண சபைகளின் எல்லை நிர்ணய அறிக்கை தோற்கடிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற அண்மைய வரலாற்றில் ஒரு வாக்கையாவது ஆதரவாகப் பெறாமல் கட்சி பேதங்களின்றி தோற்கடிக்கப்பட்ட பிரேரணை என்றால், அது இந்த மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கைதான்.

இதிலுள்ள வியப்பு, அறிக்கையை சமர்ப்பித்த அமைச்சரே இதற்கு எதிராக வாக்களித்ததே. எல்லை நிர்ணய அறிக்கையை எதிர்த்து வாக்களித்தாலும் புதிய முறையில் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளதை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாகவே கருத முடிகின்றது. இந்த எல்லை நிர்ணய அறிக்கையை எத்தனை முறைகள் திருத்தி வெளியிட்டாலும், ஏற்கனவே விகிதாசார முறையில் பெறப்பட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை அதிகரிக்காது என்பதே யதார்த்தம்.

சிறுபான்மை சமூகங்களின் அதிகாரத் தாகத்தை தணிப்பதற்கு ஜனநாயக ரீதியாக வழங்கப்பட்ட இந்த மாகாண சபை முறைமை, இதற்கு முன்னரும் பல நெருக்குதல்களுக்கு முகங்கொடுத்தது. அதிகாரப்பகிர்வும், மாகாண சபை முறைமைகளும் ஒற்றையாட்சியை படிப்படியாக சமஷ்டிக்குள் அமிழ்த்தி அழிக்கும் என்ற அச்சம் இனவாதிகளுக்குள் ஊறியுள்ள பெரும்பான்மைச் சித்தாந்தம்! இந்தப் பெரும்பான்மை வாதத்தின் ஆயுள், இனவாதத்துக்கு இரத்தம் பாய்ச்சுவதிலேயே நிலைத்து நிற்கின்றது. இதனால்தான் பெரும்பான்மைச் சமூகத்தின் அபிலாஷைகள் விடயத்தில் இரண்டு பிரதான கட்சிகளும் மிருதுவாக நடந்து, தப்பிக்கப் பார்க்கின்றன.

சிறுபான்மையினருக்கான அதிகாரப்பகிர்வு விடயங்களில் அளவு மீறி தலையை நுழைத்து அதிகாரம், ஆட்சியை இழப்பதற்கு பிரதான கட்சிகள் எவையும் இணங்கிய வரலாறுகள் கிடையாது. இணங்கியிருந்தால் எமது நாட்டின் வரலாற்றில் கறைகள் படிந்திருக்காது.

இந்தப் பின்புலத்திலே புதிய அரசியலமைப்பு, தேர்தல் முறைகளையும் நாம் ஆராய வேண்டியுள்ளது. நல்லாட்சி அரசாங்கம் அவசரமாக முன்னெடுத்த சில சீர்திருத்தங்களில் தேர்தல் முறைகளும் பிரதான பங்குவகித்தன. தேர்தல் முறைகளை மாற்றுவதால் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படுமென பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், உள்ளூராட்சி தேர்தலின் முடிவுகள் அனைவரின் எதிர்பார்ப்புக்களையும் சிதறடித்ததுடன், சிந்திக்கவும் வைத்தன. அதிகளவான பணம் விரயமாவதைத் தடுக்கவும், தேர்தலில் ஏழைகள் போட்டியிட வாய்ப்பளிக்கவுமே விகிதாசார தேர்தல் முறை ஒழிக்கப்பட்டு வட்டாரத்துக்கும், தொகுதிக்கும் பொறுப்புக் கூறும் வகையில், கலப்பு தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால், கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் சாதாரண பிரதேச சபை உறுப்பினர் ஒருவரைக் கட்சி மாற்ற ஐம்பது இலட்சம் வரை பேரம் பேசப்பட்டதுடன், அதிக வாக்குகளைப் பெற்ற கட்சிகள் ஆட்சியமைக்க முடியாமல், சிறிய கட்சிகளை நாட வேண்டியும் ஏற்பட்டது. இதை விடவும் கட்சித்தாவல் சர்வசாதாரணமாக இடம்பெறுவதற்கு இப்புதிய தேர்தல் வித்திட்டதால், புதிய தேர்தல் முறைகள் அனைவரையும் விரக்தியுறச் செய்தது. இதில் பொதுமக்களை விடவும் கட்சிகளின் தலைவர்களே அதிகம் சங்கடத்துக்குள்ளாகினர்.

சாதாரண ஒரு பிரதேச சபை உறுப்பினரிடம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் பணிந்து பேசும் நிர்க்கதியை இத்தேர்தல் முறை ஏற்படுத்தியது. இந்தக் காயங்கள் ஆறி, கள நிலவரங்கள் மாறுவதற்கு முன்னரே, மாகாண சபைகளின் எல்லை நிர்ணய அறிக்கையும் வாக்கெடுப்புக்கு வந்தது.

சூடுகண்ட பூனைக்கு அடுப்பங்கரையில் என்ன வேலை? அமைச்சர் பைஸர் முஸ்தபா எதைச் செய்தாலும் சபைக்கு வந்தால் தோற்கடிப்பதென்பதில் சில சிறுபான்மைக் கட்சிகள் தெளிவாக இருந்தன. ஏற்கனவே, மாகாண சபைத் தேர்தல் திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நாளன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேறுமென்றும் சிலர் ஆரூடம் வெளியிட்டனர். அந்தளவு இப்புதிய முறை பற்றி அமைச்சர் ரிஷாட் ஆழ்ந்த பரபரப்புடன் யோசனையில் மூழ்கியிருந்தார். வடக்கிலுள்ள முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம், மலையக முஸ்லிம்களின் தெரிவுகளை நேரடியாகப் பாதிக்கும் இப்புதிய முறை, கிழக்கிலும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெளிவாகப் புரிந்திருந்தது. இந்தத் தெளிவை ஏனைய கட்சிகளுக்குப் புரியவைக்கும் மக்கள் காங்கிரஸின் போராட்டம், சக கட்சியின் தலைமையால் கழுத்தறுப்பாகக் காட்டப்பட்டதை  முஸ்லிம் சமூக விடுதலை வரலாற்றிலிருந்து எவராலும் அழிக்க முடியாது. இந்தக் காட்டிக்கொடுப்பால் பிரதமரின் அவசர அழைப்புக்கு முன்னால், அமைச்சர் ரிஷாட் பாராளுமன்றத்தில் சூழ்நிலைக் கைதியாக்கப்பட்டார். இதனால் வேறு வழியின்றி மக்கள் காங்கிரஸ் தலைமை மாகாண திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தது.

இந்த முறையில் சிறுபான்மைச் சமூகங்களுக்கு பாதிப்பிருந்தால், பின்னர் திருத்தப்படுமென்ற பிரதமரின் வாக்குறுதியே சிறுபான்மைக் கட்சிகளை தைரியமாக இப்புதிய முறைக்கு வாக்களிக்கத் தூண்டின. எனினும், உள்ளூராட்சித் தேர்தலின் படிப்பினைகளில் பாடம்பெற்ற சிறுபான்மைக் கட்சிகள், எல்லை நிர்ணயத்தை எதிர்க்கும் என்பதால் பிரதான கட்சிகள் இதில் நிதானமாக நடந்துகொண்டன. எல்லை நிர்ணய அறிக்கையை எல்லாக் கட்சிகளும் எதிர்த்ததில் வெவ்வேறு பின்புலங்கள் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. கட்சி சார்பாக சிலரும், சமூகத்துக்காக பலரும், சிறுபான்மையினரின் நம்பிக்கையைப் பெற பிரதான கட்சிகளும் வாக்களித்துள்ளன.

இவ் எல்லை நிர்ணயத்துக்கு எதிராக மஹிந்தவின் கூட்டு எதிரணி வாக்களித்ததை, சில சிறுபான்மைத் தலைவர்கள் தங்களது சாணாக்கியத்துக்குச் சான்றாகக் காட்டுகின்றனர். உண்மையில் புதிய தேர்தல் முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்த மஹிந்த அணி, அதனோடு தொடர்புடைய எல்லை நிர்ணயத்தையும் எதிர்க்கும் என்பது எவராலும் புரிந்து கொள்ளக் கூடிய எளிய யதார்த்தம். முஸ்லிம் காங்கிரஸ் தலைமை, ஈ.பி.டி.பியின் தலைமை, மேலக மக்கள் முன்னணியின் தலைமைகள் மஹிந்தவுக்கு அரசியல் ஞானோதயம்  போதிக்கும் தேவை எழுந்திருக்க நியாயமில்லை. எனவே எவரும் இதைச் சாணக்கியம் என்றும் பேசத் தேவையில்லை.

இவற்றில் ஒன்றை மாத்திரம் தெளிவாகச் சிந்திக்க வேண்டும். பேரம்பேசும் சக்தியை அதிகரிப்பதற்கான வழி வகைகளைப் பற்றி சிந்திப்பதே முஸ்லிம் தலைமைகளுக்கு இன்றுள்ள கடமைப்பாடு. பாராளுமன்றத் தேர்தலிலிருந்த 12 வீத வெட்டுப்புள்ளியை ஐந்து சதவீதமாக்கி, இன்று 21 முஸ்லிம் எம்பிக்கள் தெரிவாக வாய்ப்பேற்படுத்தியவர் மர்ஹூம் அஷ்ரஃப்.  இதற்குத் தலைகீழாக புதிய தேர்தல் முறைக்கு ஆதரவளித்து 33 ஆகவுள்ள முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர்களை 21 ஆகக் குறைக்க முயன்ற முஸ்லிம் தலைமைகள், இன்னும் சமூகத்தின் மத்தியில் தாக்குப்பிடிக்குமா? என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

அமைச்சர் மனோகணேசன் சொல்வதைப் போல் ஓட்டை விழுந்த பழைய வீட்டை திருத்திக்கட்ட முடியாது. முற்றாக உடைத்து புதிதாகக் கட்டுவதே புத்திசாதுர்யமுடையது. எனவே, இப்புதிய முறையைக் கைவிட்டு சிறுபான்மை பிரதிநிதித்துவங்களைப் பாதுகாக்கும் தலையாய பொறுப்பை, சிறுபான்மைக் கட்சிகள் முன்னெடுக்க வேண்டுமென்பதே சிறுபான்மையினரின் எதிர்பார்ப்பு.

-சுஐப் எம்.காசிம்-

Related Post