மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறையில் அமைந்துள்ள கடற்படைத்தளத்தினை வேறு இடத்திற்கு இடமாற்றுவதன் மூலம், அப்பிரதேச மக்களும், வர்த்தகர்களும் சுதந்திரமாக செயற்படுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும், அதேவேளை இப்பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் வந்து குடியமர முடியும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன், தேசிய ஐக்கியம், மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அமைப்பின் தலைவியும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமைச்சர் றிஷாத் பதியுதீன் எழுதியுள்ள அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-
1990 ம் ஆண்டு வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் சில மணித்தியால நேர அவகாசத்துக்குள் அம் மண்ணில் இருந்து பலவந்த வெளியேற்றத்திற்குட்படுத்தப்பட்டனர். இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள் 22 வருடங்களாகி புத்தளம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சொல்ல முடியாத கஷ்டங்களை அனுபவித்து வந்தனர்.
சிலாவத்துறை கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள காணியில், மையவாடி, பள்ளிவாசல், பாடசாலை மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பன காணப்பட்டபோதும், அது யுத்தம் காரணமாக சிதைவடைந்து போனது.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட சமாதான சூழலையடுத்து, இங்கிருந்து வெளியேறிய மக்கள் மீண்டும் தமது சொந்த மண்ணுக்கு திரும்ப ஆரமபித்தனர். இந்த மீள்குடியேற்றத்துக்கு பல்வேறு தடைகளும் ஏற்படுத்தப்படுகின்றதை நீங்கள் நன்கறிவீர்கள்.
இதனடிப்படையில் சிலாவத்துறை கடற்படை முகாம் நகரத்தின் மத்தியில் அமைந்திருப்பதால், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் இதன் மூலம் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்குவதாக சுட்டிக்காட்டியுள்ளதையும் தங்களது கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.
எனவே, இந்த கடற்படை முகாமை வேறு வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்து, அம்மக்களது மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த தேவையான உதவிகளை செய்யுமாறு அமைச்சர் றிஷாத்பதியுதீன் இந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுளார்.