சம்பூர் பகுதியையே சோகத்துக்குள்ளாக்கியுள்ள ஆறு வயதுப் பாலகனான குகதாஸ் தருஷனின் மரணத்தின் மர்மத்தை மருத்துவ அறிக்கைகள் மூலமோ அல்லது விசாரணை அறிக்கைகள் மூலமோ முழுமைக் கண்டு பிடிக்கப்பட முடியாத நிலையில் பல்வேறு சந்தேகங்கள், ஊகங்கள் எழுந்துள்ளன.
இதேவேளை சிறுவனின் மரணம் தொடர்பில் உடனடியான முடிவுக்கு வரமுடியவில்லை. அத்துடன் தேவையான ஆதாரங்களை திரட்டியதன் பேரிலும் பல்வேறு பரிசோதனைகளையும் ஆய்வுகளை மேற்கொண்டதன் பேரிலுமே மரணத்துக்கான காரணத்தைக் கூற முடியும் என திருகோணமலை பொது வைத்தியசாலையின் இரசாயனப் பகுப்பாய்வு மற்றும் மருத்துவ ஆலோசகரான டபிள்யூ.ஆர்.கே.எஸ்.ராஜபக் ஷவும் மருத்துவப் பணிப்பாளர் டாக்டர் எஸ்.சதுர்முகனும் தெரிவித்தனர்.
மேலும் மூன்று கிலோ எடையுள்ள கல்லை சப்பாத்துக் கட்டும் பட்டியை நெஞ்சில் கட்டியபடி கிணற்றுக்குள் இருந்து எடுக்கப்பட்ட சிறுவனின் மரணம் எவ்வாறு இடம்பெற்றன உடனடியாக தீர்மானிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விசாரணைகளின் பின்பே இறப்புக்கான காரணத்தைக் கூறமுடியுமென மருத்துவ அறிக்கைகளும் மரண விசாரணை அதிகாரி மற்றும் பொலிஸாரின் புலன் விசாரணைகளும் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது
அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட சம்பூர் 7 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த செல்வரட்ணம் குகதாஸ் மற்றும் ஜெயவாணி ஆகியோரின் மூன்றாவது புத்திரனான குகதாஸ் தருஷன் கடந்த திங்கட்கிழமை தனது அண்ணனுடனும் அயல் வீட்டு நண்பனுடனும் மாலை 5 மணியளவில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளான். பக்கத்து வீட்டு சிறுவன் தன் வீட்டுக்குச் சென்று விட்டான். இவனுடைய அண்ணன் கடைக்குச் சென்று விட்ட நிலையில் இச்சிறுவன் தனிமையில் விடப்பட்டுள்ளான்.
நேரம் சென்றும் தனது மகனைக் காணவில்லையென பெற்றோர் தேடியுள்ளனர். தேடிய நிலையில் மகனைக் காணாத காரணத்தினால் அயலவர், பொலிஸார், உறவினர்களை அழைத்துக் கொண்டு பெற்றோர் மகனைத் தேடியுள்ளனர். சந்தேகத்தின் பேரில் வீட்டுக்கு சற்றும் தூரமாகவுள்ள பாதுகாப்பு அற்ற கிணற்றுக்குள் தேடியுள்ளனர். மாலை பட்டுவிட்ட காரணத்தினால் வெளிச்சத்தின் உதவியுடன் பார்த்தபோது சிறுவன் குப்புற கிணற்றுக்குள் இருப்பது கண்டுகொள்ளப்பட்டுள்ளது.
பெற்றோரும் ஏனையவர்களும் பதற்றமடைந்து சிறுவனின் உடலை எடுக்க முயன்ற போதும் சுழியோடி ஒருவரின் துணை கொண்டு எடுக்க வேண்டிய நிலையேற்பட்டது. அத்துடன் மரண விசாரணை அதிகாரிக்கும் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது. மரணவிசாரணை அதிகாரி ஏ.ஜே.ஏ. நூருள்ளா சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு வந்த பின் சுழி ஓடியொருவரின் துணை கொண்டு சிறுவனின் உடல் கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டது. சிறுவனின் நெஞ்சில் மூன்று கிலோ எடையுள்ள கல் கட்டப்பட்ட நிலையில் குப்புற இருந்த சடலம் திங்கள் இரவு 12.10 மணிக்கு மீட்கப்பட்டது. மரண விசாரணை அதிகாரி இது கொலையாக இருக்கலாமென சந்தேகப்பட்டதன் பேரில் மூதூர் நீதிமன்ற நீதவான் ஐ.என்.ரிஸ்வானுக்கு தெரிவிக்கப்பட்டது.
மூதூர் நீதிமன்ற நீதிவான் மற்றும் மரண விசாரணை அதிகாரி ஆகியோரின் ஆலோசனையின் பேரில் பிரேதப் பரிசோதனைக்காக செவ்வாய் காலை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சிறுவனின் சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் மரணம் பற்றி திருகோணமலை பொது வைத்தியசாலையின் இரசாயனப் பகுப்பாய்வு மற்றும் மருத்துவ ஆலோசகரான டபிள்யூ.ஆர்.கே.எஸ்.ராஜபக் ஷவுடனும் மருத்துவப் பணிப்பாளர் டாக்டர் எஸ்.சதுர்முகனுடனும் தொடர்பு கொண்டு கேட்டபோது சிறுவனின் மரணம் தொடர்பில் உடனடியான முடிவுக்கு வரமுடியவில்லை என்று தெரிவித்தனர்.
அத்தடன் தேவையான ஆதாரங்களை திரட்டியதன் பேரிலும் பல்வேறு பரிசோதனைகளையும் ஆய்வுகளை மேற்கொண்டதன் பேரிலுமே மரணத்துக்கான காரணத்தைக் கூறமுடியுமெனக் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் கருத்துத் தெரிவிக்கையில் சிறுவன் மூச்சுத் திணறி இறந்தாரா அல்லது திட்டமிட்ட முறையில் படுகொலை செய்யப்பட்டாரா? என்ற உடனடி முடிவுக்கு விசாரணைகளின் பின்பே வரமுடியுமென தெரிவித்துள்ளனர்.
சிறுவன் மூன்று கிலோ எடையுள்ள கல்லை தனது நெஞ்சில் கட்டியிருக்க முடியாது. கட்டப்பட்ட முடிச்சும் பின்புறத்தில் கட்டப்பட்டுள்ளது. கல்லு கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட சப்பாத்து பட்டி மிகவும் உறுதிவாய்ந்தது. சாதாரண மக்கள் பாவிக்கும் லேஸாக தெரியவில்லை. கொலை செய்யப்பட்ட பின் கல்லுக்கடி கிணற்றுக்குள் தூக்கிப் போடப்பட்டானா? அல்லது உயிருடன் கல்லுக்கட்டி கிணற்றுக்குள் போடப்பட்டதனால் மூச்சுத் திணறி இறந்தானா என்பது மர்மமாகவுள்ளது. எவ்வாறு இருந்த போதிலும் இது ஒரு திட்டமிட்ட கொலையாக இருக்க வேண்டும். பாதுகாப்பற்ற கிணற்றடிப் பக்கம் அச்சிறுவன் மாலை வேளையில் செல்வதற்கு சந்தர்ப்பம் இல்லை. அதுவுமன்றி மேற்படி கிணறு கடற்படை முகாமுக்கு அருகில் குடியேற்றவாசி ஒருவரின் வீட்டுக் கிணறு என சம்பூர் மக்கள் உறவினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
அத்துடன் சிறுவனின் உடலை பரிசோதனைப்படுத்தியபோது எவ்வித படுகாயங்களோ அல்லது மாற்று நிலை பயன்களுக்கோ அவர் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரியவில்லையென தெரிவித்துள்ளனர்.
ஐந்து வயதைப் பூர்த்தி செய்த இச்சிறுவன் சம்பூர் மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்றுக்கு சேர்க்கப்பட்டு இன்னும் ஒரு மாதம் கூட கடக்கவில்லை. மருத்துவப் பரிசோதனைகளின் பின் நேற்று காலை 11.30 மணியளவில் சிறுவனின் சடலம் சம்பூர் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.