பாராளுமன்றத்திற்குள் உரையாற்றுவதற்கு எமக்கு சட்டரீதியான “கால வரையறையை” வழங்குமாறு அரசை வலியுறுத்தும் போராட்டத்தை எம்மோடு இணைந்துள்ள 50 எம்.பிக்கள் முன்னெடுக்கவுள்ளார்கள் எனத் தெரிவித்த முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான வாசுதேவ நாணயக்கார இது தொடர்பாக 50 எம்.பிக்கள் கையெழுத்திட்ட கடிதமும் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார எம்.பி. மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சியின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவருக்கான எமது உரிமை பறிக்கப்பட்டது. இன்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியான எமக்கான பேச்சுரிமை மறுக்கப்படுகின்றது.
நாட்டினதும் மக்களினதும் பிரச்சினைகள் தொடர்பாக குரல் கொடுக்கும் உரிமை எமக்கு உள்ளது. எம்மோடு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 50 எம்.பிக்கள் இருக்கின்றனர்.
எனவே பாராளுமன்றத்திற்குள் உரையாற்றுவதற்கான காலவரையறையொன்று எமக்கு உள்ளது. ஆனால் அந்தக் “காலம்” எமக்கு வழங்கப்படுவதில்லை. பாராளுமன்ற ஜனநாயகத்தை இந்த அரசு மீறிச் செயற்படுகிறது. இதனை எதிர்த்து 50 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு சபாநாயகரிடம் மனுவொன்றை கையளித்துள்ளோம். எமக்கு நியாயம் கிடைக்காவிட்டால் “எதிர்க்கட்சியின்” உரிமைக்காக பாராளுமன்றத்துக்குள் குரல் கொடுப்போம்.
எதிர்க்கட்சிக்கான உரிமையை பறிக்கும் பிரதமரினதும் சபாநாயகரினதும் நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச பாராளுமன்றச் சங்கத்திற்கு நான் முறைப்பாட்டுக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளேன்.
உலகிற்கு தன்னை கனவானாகக் காட்டிக் கொள்ளும் பிரதமரின் பாராளுமன்ற செயற்பாடு தொடர்பாகவே இம்மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை, ஆனால் முறையிடும் கடமை எமக்கு உள்ளது என்றும் வாசுதேவ நாணயக்கார எம்.பி தெரிவித்தார்.