Breaking
Tue. Nov 26th, 2024

-ஊடகப்பிரிவு-

பேருவளை பிரதேச சபையின் முதல் அமர்வு நேற்று முன்தினம் (24) சபையில் ஒன்று கூடியது. இதன் போது, சபை தவிசாளர் இம்மாதத்துக்கான முன்மொழிவுகள் அனைத்தையும் அடுத்த மாதம் எடுத்துக் கொள்வதாகவும், தலைவரின் யோசனைகள் மாத்திரம் விவாதத்துக்கு எடுக்கப்படும் என்று அறிவித்தார்.
இதன்போது, பேருவளை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஹஸீப் மரிக்கார் உரையாற்றுகையில்,
“நீங்கள் தர்கா நகர் வரிப்பண சங்கத்தை சந்தித்த வேளை ஒரு வாக்கு கொடுத்துவிட்டு வந்தீர்கள், 24ம் திகதி விவாதத்திற்கு எடுக்கப்பட்டு இதற்கென ஒரு முடிவைத் தருவதாக. இன்று நீங்கள் சபையில் உறுப்பினர்களின் யோசனைகள் அனைத்தையும் அடுத்த மாதம் எடுப்பதாக கூறியுள்ளீர்கள். நாங்கள் ஊருக்குச் செல்ல வேண்டும், மக்களைச் சந்திக்க வேண்டும், அவர்களிடம் நாம் என்ன பதிலளிப்பது? ஆகவே இதற்கான முடிவை நீங்கள் தந்துதான் ஆக வேண்டும். நீங்கள் இம்மாதத்துக்கான யோசனைகளை அடுத்த மாதத்துக்கு பிற்போடுவதாக இருந்தால், வரி செலுத்துவதற்கான சலுகைக் காலம் இம்மாதத்துடன் முடிவடைவதால், அதை மே மாதம் 31ம் திகதி வரை பிற்போட வேண்டும். அவ்வாறு நீடித்துக் கொடுப்பதாக இருந்தால் தர்கா நகர் வரிப்பணம் சம்பந்தமான யோசனையை அடுத்த மாதம் எடுக்கலாம்” என்று கோரிக்கைகை முன்வைத்தார்.
அதன்போது, அதனைச் செய்ய முடியாது என்று பிரதேச சபை செயலாளர் கூற, உடனே எழுந்து நின்ற ஹஸீப் மரிக்கார், “பேருவளை நகரசபை தவிசாளருக்கு ஒரு மாதம் நீடித்துக் கொடுக்குமென்றிருந்தால் ஏன் எமது தவிசாளருக்கு முடியாது? பேருவளை நகரபிதா நீடித்து கொடுத்திருந்தமைக்கான ஆதாரம் உள்ளது.”
 “அது மாத்திரமல்ல தர்கா நகர் மக்கள்,பேருவளை பிரதேச சபையில் சுற்றியுள்ள சுற்றுலா பிரதேசங்களை விட கூடிய வரிப் பணத்தை தர்கா நகர் செலுத்திக் கொண்டிருக்கிறது. “
“அது மாத்திரமல்ல, தர்கா நகர் சொத்துப் பெறுமதி, பேருவளை பிரதேச சபையின் ஏனைய பிரதேசங்களை விட அதிகரிக்கப்பட்டுள்ளது.  கொழும்பு மாநகர சபை, தெஹிவளை மாநகர சபை, பேருவளை நகர சபை உட்பட அனைத்துப் பிரதேசங்களை விட சொத்துப் பெறுமதி தர்கா நகரில் அதிகரிக்கப்பட்டு காணப்படுகின்றது.”
“இதில் எங்கோ ஒரு பிழை காணப்படுகின்றது. ஆகவே இந்தப் பிழை திருத்தப்பட வேண்டும். இந்தப் பிழை திருத்தப்படும் வரை கணிக்கப்பட்ட சொத்துப் பெறுமதியை இரத்துச் செய்துவிட்டு, மீண்டும் பேருவளை பிரதேச சபைக்குட்பட்ட நான்கு பிரதேசங்களையும் ஒன்று சேர்த்து, திரும்பவும் சொத்துப் பெறுமதி கணிக்கப்பட்டு அடுத்த வருடத்திலிருந்து புதிய வரிப்பணத்தை அறவிடும்படியும், இந்த ஆண்டுக்கான வரிப்பணத்தை பழைய சொத்துப் பெறுமதிக்கமைய அறவிடும்படியும் கேட்டுக் கொள்கின்றேன்” என்றும் கூறினார்.
மேலும் அவர், “அடுத்த மாதம் இந்த யோசனையை எடுக்கும் வரையில் கட்டாயம் மே மாதம் 31 திகதி வரை எமது மக்களுக்கான சலுகைக் காலம் நீடிக்கப்பட்டு தரவே வேண்டும்” என்று விடாப்பிடியாக இருந்தார்.
இந்தக் கட்டத்தில் தவிசாளர் உள்ளூராட்சி மன்ற ஆணையாளருக்கு இவைகளை அறிவித்து  மக்களுக்கு உரிய நடவடிக்கைகளை நாம் தருவோம் என்று உறுதிமொழி வழங்கினார்.
அதே நேரத்தில் தர்கா நகரின் ஏனைய உறுப்பினர்களான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள், சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குரலில் ஹஸீப் மரைக்காருடைய கோரிக்கை சரி என்றும் அதற்கு ஆதரவளித்து கருத்துக்களை முன்வைத்தனர்.
சூடுபிடித்த இவ்விவாதம் ஏறத்தாழ முப்பது நிமிடங்களுக்கு மேலாக சென்றது. இதில் பல்வேறுபட்டவர்கள் பல்வேறு கருத்தை முன்வைத்தாலும், தர்கா நகரைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் ஊருக்காக ஹஸீப் மரிக்கார் முன்வைத்த கருத்தின் பக்கம் இருந்தார்கள். அத்துடன் பெரும்பான்மை உறுப்பினர்கள் பலர் கூட இக் கருத்தை ஆமோதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post