Breaking
Mon. Dec 23rd, 2024

இலங்கை அரசியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்வு இன்று (17) மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்குடா கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முன்னாள் பிரதியமைச்சரும் மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்துகொண்டு மக்கள் மத்தியில் விளக்கமளித்தார்.

மேலும், திடீர் அரசியல் மாற்றம் நிகழ்ந்த நாள்முதல், இன்றுவரை நாட்டில் அரசியல் முன்னெடுப்புக்கள் எவ்வாறு செல்கின்றது, எதிர்காலத்தில் என்னென்ன விடயங்கள் அமையவுள்ளது என்பன பற்றி மிகத்தெளிவாக உரையாற்றினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி பதவியை குடும்ப சொத்தாக நினைத்து சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை சமூகத்தை கறிவேப்பிலையாக பாவிக்கும் நிகழ்வை எங்களால் அனுமதிக்க முடியாது.  பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு நான்கரை வருடங்களுக்கு பிறகுதான் உள்ளது. இதுபற்றி விளக்கம் தெரியாத ஜனாதிபதியாக இருக்க வேண்டும். அல்லது சட்ட ஆலோசகரை கொண்டு பெற முடியாத ஜனாதிபதியாக இருக்க வேண்டும்.

அரசியலமைப்பு சட்டத்தை பத்தாம் ஆண்டு மாணவனிடம் கொடுத்தாலே அவன் அதனை தெளிவாக வாசித்து சொல்லுவான். அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தில் கூட குறிப்பிடப்பட்டுள்ளதாவது நான்கரை வருடங்களுக்கு பிறகுதான் கலைக்க முடியும் என்று உள்ளது.

அதற்கு முன்னதாக கலைக்க வேண்டுமாக இருந்தால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை காட்டிய பின் கலைக்க முடியும். ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை உள்ள நிலையில் சட்டவிரோதமான பிரதமர் மஹிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரனையை கொண்டு வந்தோம்.

ஜனாதிபதிக்கும் சபாநாயகர் மற்றும் சிறுபான்மை கட்சி தலைவர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார் வாக்கெடுப்பை நடாத்துங்கள் அதற்கு ஜனநாயகமாக நடந்து கொள்ளுங்கள் என்று என்னுடைய உறுப்பினர்களிடம் சொல்லுகின்றேன் என்றார். அவ்வாறு இல்லையெனில் சபாநாயகரிடம் உள்ள அதிகாரத்தின் மூலம் வாய்மூலமான வாக்கெடுப்பை நடத்தலாம் என்றார்.

வாய்மூலமான வாக்கெடுப்பை நடத்த சபாநாயகர் முற்பட்ட போது சபாநாயகரை தாக்கி மிளகாய்தூள் தண்ணீர் ஊற்றி கத்தி போராட்டம் நடத்தி பெறுமதியான புத்தகங்களை எல்லாம் வீசினார்கள். இவர்கள் வேறு யாரும் இல்லை கடந்தகால ஆட்சிகாலத்தில் செய்த தவறுகளால் இப்போது நீதிமன்றத்தில் வழக்குகளுடன் தொடர்புடையவர்கள்.

மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் வந்தால் தான் தாம் நிம்மதியாக வாழ முடியும் என்று நம்புகின்றவர்கள். இதில் உயர் அந்தஸ்துள்ள அமைச்சர்கள் எவரும் சண்டித்தனம் காட்ட மாட்டார்கள். அது பாராளுமன்ற முறை, ஆனால் இங்கு அவை மீறி காட்டப்பட்டுள்ளது.

இப்போது வாய்மூலமான வாக்கெடுப்பு நடாத்தி பிரதமருக்கு எதிரான பிரேரனை வெற்றி பெற்ற பின் ஜனாதிபதியிடம் சென்ற போது அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. பாராளுமன்றத்தில் சபாநாயகர் எடுத்த முடிவை எந்த நீதிமன்றமும் எதிர்க்க முடியாது.

பிரதமர் மஹிந்தவை கூப்பிட்டு பெரும்பான்மையை நிரூபித்து காட்டுங்கள் என்று கூறியுள்ளார் ஜனாதிபதி. ஏனெனில் மீண்டும் ஜனாதிபதியாக தாம் வரவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால ஆசைப்படுகின்றார் என்பது தான் இதன் அர்த்தம். ஆனால் மஹிந்தவை பற்றி இவருக்கு தெரியாது. அப்பத்த குடுத்து ஆப்பு வச்சதுக்கு இவர் சும்மா இருப்பாரா மஹிந்த. ஜனாதிபதி தேர்தல் வந்தால் மகிந்த கட்சியில் உறுப்பினர்கள் அதிகம் ஆனால் ஜனாதிபதிக்கு யாரும் இல்லை.

அதுமட்டுமல்ல பிரதமர் பதவி கிடைத்தவுடன் மகிந்த தனது உறுப்பினர்களுக்கு தாமரை மொட்டில் உறுப்பினர் பதவியை பெற்றுக் கொடுத்து ஜனாதிபதியின் கட்சியில் இருந்து பிரிந்து சென்றுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியை உடைக்கும் வகையில் சஜீத் பிரேமதாசவை கொண்டு வாருங்கள் என்று கூறுகின்றனர்.

அவ்வாறு சஜீத் பிரேமதாச ஜனாதிபதியோடு சென்று பிரதமர் பதவியை பெற்று ஆட்சி நடாத்தும் பட்சத்தில் சஜீத் பிரேமதாசவையும், ஐக்கிய தேசிய கட்சியையும் அழித்துவிட்டு மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவோடு பணியை தொடரலாம் என்று ஜனாதிபதி எதிர்பார்க்கின்றார்.

இந்நாட்டினுடைய ஜனாதிபதி இந்நாட்டின் ஜனநாயகத்தை மதிக்கின்ற தலைவராக இருக்க வேண்டும். சிறுபான்மை கட்சி தலைவர்கள், மக்கள் கடந்த காலத்தில் தோல் கொடுத்து சுமந்த வேதனையை இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு இருக்கையில் சிறுபான்மை சமூகத்தின் முதுகில் ஏறி கபளிகரமாக இன்னும் ஒரு அநியாயத்தை மஹிந்தவோடு சேர்ந்து செய்வதாக இருந்தால் ஜனாதிபதிக்கு தகுதியற்றவர் என்பதை நான் சொல்லிக் கொள்கின்றன்.

தனக்கு கொலை அச்சுறுத்தல் என்றால், ரணிலோடு சேர்ந்து இயங்க முடியாது என்றால் தன்னை ஜனாதிபதியாக கொண்டு வந்த அரசியல் கட்சிகளோடு பேசியிருக்க வேண்டும். அத்தோடு கட்சி தலைவர்களிடம் இவரோடு பயணிக்க முடியாத காரணத்தை சொல்லியிருக்க வேண்டும். உங்கள் குடும்ப சொத்தாக நினைத்து சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை சமூகத்தை கறிவேப்பிலையாக பாவிக்கும் நிகழ்வுக்கு எங்களால் அனுமதிக்க முடியாது.

ஒரு பிரச்சனை வருகின்ற போது சில தலைவர்கள் தயங்கிப் போய் விடுவார்கள், இந்த நிலைமையில் என்ன தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று தங்களை மறந்து போய் விடுவார்கள். ஆனால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீன் முஸ்லிம் சமூகத்திற்கான எடுக்கின்ற தீர்மானத்தை பார்த்து நான் பல தடவை மெய்சிலித்து போய் இருக்கின்றேன் என்றார்.

இந்நிகழ்வுக்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்கே.பி.எஸ்.ஹமீட் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, பிரதேச சபை உறுப்பினர்கள், மீராவோடை மீராஜும்ஆ பள்ளிவாயல் தலைவர் ஏ.எல்.அலியார், சட்டத்தரணி எம்.எம்.ராசிக் மற்றும் வைத்தியர் அப்தாப் அமீர் அலி ஆகியோரும், பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள், பள்ளிவாயல் நிருவாகத்தினர் மற்றும் ஏராளாமான பொதுமக்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Post