Breaking
Mon. Nov 25th, 2024

இனங்களுக்கிடையே சுமூகமான நல்லுறவு ஏற்பட்டு, சகல இன மக்களும் சமாதானத்துடன் வாழும் சூழல் நிலைத்து நிற்க வேண்டுமென, இந்தத் தியாக திருநாளில் முஸ்லிம்கள் ஏக இறைவனை பிரார்த்திக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

உலகின் பல்வேறு பாகங்களில் வாழும் முஸ்லிம்கள் தியாகத்திருநாளை, தியாக உணர்வோடு கொண்டாடி வருகின்றனர். இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து புனித மக்கமா நகரில் நமது சகோதரர்கள் ஒன்றுகூடி, அழுது, தொழுது, அல்லாஹ்விடம் பிரார்த்தித்து வருகின்றனர்.

இன்றைய நந்நாளில், இப்ராஹீம் நபி, அவரது அருமை மகன் இஸ்மாயில் நபியின் தியாக உணர்வுகளை நினைத்துக் கண்ணீர் மல்கி நிற்கின்றோம்.

இன்றைய நந்நாளில் நமது சமூதாயம் படுகின்ற வேதனைகள் நீங்கி, நிம்மதியான வாழ்வு அவர்களுக்குக் கிட்டவேண்டுமென அல்லாஹ்வை பிரார்த்திப்போம். பிறமத சமூகத்துடன் அன்பாக நடந்து, அவர்களுடன் நல்லுறவைப் பேணுவோம். ஒருவருக்கொருவர் உதவி செய்து இஸ்லாமிய வழிமுறைகளை நன்முறையாகக் கடைப்பிடித்து வாழ இத்திருநாளில் உறுதி பூணுவோம். இன்னும் அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமது சகோதரர்கள் விரைவில் தமது சொந்த இடங்களுக்கு திரும்பி இயல்பான வாழ்வை திரும்பப்பெற இந்நந்நாள் உதவ வேண்டும்.

உலகில் வாழும் முஸ்லிம்கள் ஆதிக்க சக்திகளிலிருந்து விடுபட்டு நிம்மதியாகவும், சந்தோசமாகவும் வாழ்வதற்கு இன்றைய நாள் வழிகோல வேண்டும். முஸ்லிம் நாடுகளில் வேண்டுமென்றே பிரச்சினைகளை உருவாக்கி, அவற்றுக்கிடையிலான வல்லாதிக்க சக்திகளின் போக்கை முறியடிக்கும் வகையில் நமது பிரார்த்தனைகளை அமைத்துக்கொள்வோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

-ஊடகப்பிரிவு-

Related Post