Breaking
Mon. Dec 23rd, 2024

 

எம்.ஏ.றமீஸ்

 கட்சிகள் சமுதாயத்தின் தேவையாக இருந்து செயற்பட வேண்டுமே தவிர கட்சியின் தேவைக்காகவும், கட்சித் தலைமைத்துவத்தின் தேவைக்காகவும் சமுதாயம் பயன்படுத்தப்படக் கூடாது என வர்த்தக கைத்தொழில் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாடு நேற்று (14)  மாலை அக்கரைப்பற்று டி.எப்.சி வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ் ஊடகவியலாளர் மாநாட்டின்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அக்கரைப்பற்று அமைப்பாளரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க் கட்சித் தலைவருமான எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி,  மு.காவின் அக்கரைப்பற்று மத்திய குழுவின் உப தலைவரும், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் இணைப்பாளர் ஏ.எல்.மர்ஜுன் உள்ளிட்ட தேசிய காங்கிரஸ் கட்சி அங்கத்தவர்கள், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் பிரதான கட்சியாக இணைந்துள்ள, அகில இலங்கை மக்கள் காங்கரிஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் இணைந்து கொண்டனர்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இதன்போது மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் ஒருசில கட்சிகளின் தேவைக்காகவும், கட்சித் தலைமைத்துவத்தின் இருப்பிற்காகவும் சமுதாயம் அர்ப்பணம் செய்யப்பட்டு வந்த வரலாறுகள் இருக்கின்றன. இவ்வாறான நிலைமை தொடர்ந்தும் ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு, நாம் சமுதாயத்தின் நலனில் அக்கறை கொண்டு செயற்பட வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம்.

எமது சமுதாயத்தினுடைய நலனையும், சமுதாயத்தின் உரிமையினையும், சமுதாயத்தின் இருப்பினையும் முன்னிலைப்படுத்தி ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு எனும் கட்சியொன்றை உருவாக்கியிருக்கின்றோம். இப்பொதுக் கட்சியில் எத்தரப்பினரும் அச்சமின்றி இணைந்து கொண்டு சமூக நலனுக்காக செயற்பட முடியும்.

இக்கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறான நோக்கங்கள் இருப்பினும் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு சமூக நலனை மையப்படுத்தி செயற்படும் வகையில் நாம் ஒன்று சேர்ந்திருக்கின்றோம். மறைந்த பெருந்தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை சமூக விடுதலைக்காக உருவாக்கியபோது பக்கபலமாக நின்று செயற்பட்ட அக்கட்சியின் செயலாளர் நாயகமாக இருந்த எம்.ரி.ஹஸன் அலியினை தலைவராகக் கொண்டு இக்கூட்டணியினை உருவாக்கியிருக்கின்றோம். தலைமைத்துவத்திற்கு மிகவும் பொருத்தமானவரும் மிகுந்த அனுபவசாலியுமான இவர் தூய சமூகப் பொறுப்புடன் கூட்டணியினை வழிநடாத்துதற்கு உறுதி பூண்டுள்ளார்.

இக்கூட்டமைப்பில் இணைந்து கொள்வதற்கு நாம் பகிரங்கமாக திறந்த அழைப்பினை விடுக்கின்றோம். பிரிவு, பிளவு, கருத்து வேறுபாடு போன்றவற்றை மறந்து நாங்கள் இணைந்ததுபோல் அனைவரும் இக்கூட்டமைப்பில் இணைந்து எமது சமூக விடுதலைக்காகவும், சமுதாயத்தின் எதிர்கால சுதந்திர இருப்பிற்காகவும் அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டு அணி திரள வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள எமது சமூகத்தின் காணிகள் சில தரப்பினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதுமாத்திரமல்லாமல் பல்வேறான இழப்புக்களையும் நெருக்குதல்களையும் எமது சமூகம் தொடர்ந்தேர்ச்சியாக முகம் கொடுத்து வருகின்றது. எமது மக்களின் உரிமைகளையும் இருப்பினையும் உறுதிப்படுத்துவதற்காக நாம் ஒவ்வொருவரும் தனித்து நின்று குரல் கொடுப்பதைப் பார்க்கிலும் கூட்டாக நின்று பலத்த சக்தியோடு குரல் கொடுப்பதில் பாரிய அதிர்வலைகளை பல தரப்பினர் மத்தியிலும் ஏற்படுத்தும் என்ற திடமான நம்பிக்கை எமக்கிருக்கின்றது.

எமது முஸ்லிம் சமூகத்திற்கு பல்வேறான பிரச்சினைகள் இருக்கின்ற கிழக்கு மாகாணத்தில் நாம் கூட்டமைப்பினை ஏற்படுத்தி எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் களமிறங்குகின்றோம். இத்தேர்தலில் எமது கூட்டணி பெறுகின்ற வெற்றியானது எமது சமுதாயத்தினை எதிர்நோக்கி வரவிருக்கும் பாரிய ஆபத்துக்களை தடுக்கும் சக்தியாக அமையும்.

எமது கூட்டணி தனித்து நின்று போட்டியிடும் பகுதிகளில் மக்கள் ஆணையினைத் தரவேண்டும். சுயநலமற்று பொது நலத்திற்காய் இணைந்துள்ள எமது இலக்கினை அடைந்து கொள்வதற்கு மக்கள் நிச்சயம் தமது ஆதரவினை நல்குவார்கள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்களுக்கும் இடமில்லை என்றே எண்ணுகின்றேன். வடக்கு கிழக்கு மீண்டும் இணைக்கப்படுமா? அல்லது இம்மாகாணங்கள் தனித்தனியாகத்தான் இருக்கப் போகின்றதா என்பது போன்ற பல்வேறான பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் முதற்கட்டக் களமாக இவ் உள்ளுராட்சித் தேர்தல் அமைய உள்ளது.

கடந்த காலங்களில் அவ்வப்போது எழுகின்ற பிரச்சினைகளை வைத்து அந்தந்தக் காலத்தில் சுயநலத்தை மையப்படுத்தி பிரச்சினைகள் பேசப்பட்டதே தவிர முஸ்லிம் சமூகம் சார்ந்த அக்கட்சியினால் இச்சமூகத்திற்காக எதனையும் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. இவ்வாறு காலத்திற்கு காலம் சுயநலப் போக்கோடு செயற்படும் இவ்வாறான கட்சிகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டியுள்ளது.

எம் ஒவ்வொருவரிடத்திலும் வெவ்வேறான கருத்து வேறுபாடுகள் காணப்பட்டு வருகின்றபோதிலும் சமுதாயத்தின் நலன், சமுதாயத்தின் இருப்பு, சமுதாயத்தின் உரிமை போன்ற பிரதான காரணங்களுக்காக அனைவரும் விட்டுக் கொடுப்புக்களுடன் செயற்பட்டு வேற்றுமையில் ஒற்றுமை காண ஐக்கியப் பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.

நாட்டில் நிலவும் பல்வேறான விடயங்களுள் சமூகத்திற்கு தாக்கம் ஏற்படும் என எண்ணப்படும் சம்பவங்கள், முன்னெடுப்புக்கள் போன்றவற்றை நாம் சமூக நலனுக்காக குரல் கொடுக்க வேண்டியிருக்கின்றது. அரசியலமைப்புச் சீர்திருத்தம், நாட்டின் தீர்வுத் திட்டம் தேர்தல் முறைகள். ஓவ்வொரு சமூகத்திற்குமான விகிதாசாரப் பங்கீடு போன்ற விடங்களின்பால் நாம் சமூகம் சார்பாக மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு குரல் கொடுக்க வேண்டியுள்ளது.

இந்நாட்டில் வாழும் எமது முஸ்லிம் சமூகத்திற்கு பல்வேறு கால கட்டங்களில் பல்வேறான இன்னல்களும் நெருக்குதல்களும் கொடுமைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. அவ்வாறான சந்தர்ப்பங்களிலும் எமது சமூகம் வன்முறைகளையோ, ஆயுதக் கலாசாரத்தினையோ முன்னெடுக்கவில்லை. அனைத்து விடயங்களுக்கும் ஜனநாயக ரீதியில் தீர்வினைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அனைத்து சமூகத்தவர்களுடனும் தர்க்கிக்காத வகையில் நடந்த வரலாறுகள் இருக்கின்றன.

பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்ட காலமாக இருந்தாலும், முஸ்லிம் சமூகம் சொந்த மண்ணில் இருந்து விரட்டப்பட்ட காலமாக இருந்தாலும், எமக்கான நிலங்களும் சொத்துக்களும் வேண்டுமென்றே சூறையாடப்பட்டாலும் எமது முஸ்லிம் சமூகம் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு தமக்கான தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்காக செயற்பட்டிருக்கின்றது. இவ்வாறாக ஜனநாயக ரீதியில் தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்காகவும் நாட்டின் ஜனநாயக நீரோட்டத்திற்கு பங்களிப்புக்களை மேற்கொண்டு செயற்பட்டு வரும் எமது சமூகத்திற்கு அனைத்துத் தரப்பினரும் முன்வந்து தீர்வினைப் பெற்றுத்தர வேண்டியதாக உள்ளது என்றார்.

Related Post