Breaking
Wed. Jan 15th, 2025

சமூக அமைதியை குலைக்கக் கூடிய அரசியல் சக்திகளை தோற்கடிக்கும் வகையில், சிறுபான்மை மக்கள் தனது ஜனநாயக சக்தியான வாக்குப்பலத்தை பிரயோகிப்பதுடன், சமூகக் குரல்களாக ஒலிக்கக்கூடிய பிரதிநிதிகளை தெரிவுசெய்வதில் உறுதியாக இருக்க வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான  ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

முல்லைத்தீவில், இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது,

“சிறுபான்மை மக்களை குழப்பத்துக்குள்ளாக்கி, பெரும்பான்மை மக்களுடைய வாக்குகளை அபரிமிதமாக பெறும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகள், அரசியல் களத்தில் தலைதூக்கியுள்ளன. இதன்மூலம், சிறுபான்மை மக்களை ஒருவகையான பீதிக்குள்ளாக்கி, தமது கைங்கரியத்தை எட்டுவதே இவர்களின் இலக்கு. சிறுபான்மை மக்கள் நிதானமாக சிந்தித்து, வாக்கின் பெறுமதியுணர்ந்து, அவற்றை சீரழித்துவிடாமல் வாக்களிக்க வேண்டும்.

நமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், உரிமைகளை வெல்வதற்கும், நமக்கான அபிவிருத்தியை அடைவதற்கும், நமது பாதுகாப்பிற்கும், ஏற்கனவே அனுபவித்துக்கொண்டிருக்கும் உரிமைகளை காப்பாற்றுவதற்குமான சரியான, பொருத்தமான பிரதிநிதிகளுக்கே வாக்களிக்க வேண்டும்.  இதன்மூலமே, நமக்கு விடிவு கிடைக்கும். எனவே, அற்பசொற்ப இலாபங்களுக்காகவும் சலுகைகளுக்காகவும் வாக்குகளை சீரழித்துவிடாதீர்கள்” என்றார்.

‘முல்லைத்தீவு மாவட்டத்தில் பெருமளவிலான இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருப்பது, ஜனநாயகத் தேர்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளனவே’ என்று ஊடகவியலாளர் ஒருவர், முன்னாள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டிய போது, அதற்கு பதலளித்த அவர்,

“வன்னிப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் இவ்வாறான சோதனைச் சாவடிகள், எதிர்க்கட்சிக்காரர்களின் தேர்தல் நடவடிக்கைகளை தடுப்பதாகவோ, அவர்களுக்கு தொல்லைகள் கொடுப்பதாகவோ அமைந்துவிடக் கூடாது. இந்தப் பிரதேசத்தில் அமைதியான சூழல் நிலவுகின்றது. இருந்தபோதும், மாவட்டத்தின் பாதுகாப்பை நான் கேள்விக்குட்படுத்த விரும்பவில்லை.

எனினும், இவ்வாறான சோதனைச் சாவடிகள் வாயிலாக, எதிர்க்கட்சிகளை மட்டும் சோதனையிடுவதாகவோ, அவர்களுக்கு சிரமங்களையும் கஷ்டங்களையும் ஏற்படுத்தி, கட்டுப்படுத்துவதாகவோ அமையக் கூடாது.

இது தேர்தல் காலமாகையால், அரசியல் கட்சிகள் சுதந்திமாகவும், எத்தகைய தடைகளின்றியும் மக்களை சந்திப்பதற்கும், வேட்பாளர்கள் தத்தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கும் உரிய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையகம் இதனை உறுதிப்படுத்த வேண்டுமென நான் கோருகின்றேன்.

தற்போது, ஆளுங்கட்சியினருக்கு ஒரு நியாயாம், எதிர்க்கட்சியினருக்கு இன்னுமொரு நியாயம் என்ற செயற்பாடுகளே வன்னியில் இடம்பெறுவதாக எமக்கு புலப்படுகின்றது.

அதுமாத்திரமின்றி, ஊரடங்கு வேளையிலும், கொரோனா கெடுபிடியிலும்  ஆளுங்கட்சியினர், தமது அரசியல் செயற்பாடுகளையும், கூட்டங்களையும் நடாத்தியதை நாம் கண்ணுற்றோம். ஆனால், எதிரணி வேட்பாளர்களுக்கு அவ்வாறான சந்தர்ப்பம் கிட்டவுமில்லை. அவர்கள் அத்தகைய முறைகேடான நடவடிக்கைகளை எதிர்பார்த்திருக்கவுமில்லை என்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட வேட்பாளர் மகாலிங்கம் நந்தனும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post