Breaking
Mon. Jan 13th, 2025

நமது சமூகத்தின் குரல், மக்கள் காங்கிரஸின் தலைவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முஸ்லிம் சமூகத்தின் குரலாக, அர்ப்பணிப்புடன் செயற்பட்டதால், இந்த அரசினதும், பேரினவாதத்தினதும் நெருக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளார் என மக்கள் காங்கிரஸின், திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.எம்.அஷ்ரப் தாஹிர் கூறினார்.

நிந்தவூர், வன்னியார் வட்டாரத்தில் நடைபெற்ற. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வேட்பாளர் அஷ்ரப் தாஹிரை ஆதரித்து நடைபெற்ற இக்கூட்டம், பிரதேச சபை பட்டியல் வேட்பாளர் கே.எல்.றபீக் தலைமையில் நடைபெற்றது.

வேட்பாளர் அஷ்ரப் தாஹிர் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்,

“கடந்த முறை இந்த மாவட்டத்தில் நான்கு உறுப்பினர்களை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம். ஆனால், இவர்கள் பெயரளவில் எமது பிரதிநிதிகளாக வலம் வந்தனரே தவிர மக்களுக்கோ சமூகத்திற்கோ உருப்படியான எந்த சேவையையும் செய்யவில்லை. முஸ்லிம் சமூகம் பல்வேறு நெருக்குதல்கள், நெருக்கடிகள், துரோகத்தனங்களுக்கு முகம் கொடுத்த போதிலும், அவற்றுக்காக எதிர்க்குரல் எழுப்பக்கூட திராணியற்ற நிலையிலேயே இவர்கள் இருந்துவந்தனர். ஏன்? முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நகர அபிவிருத்தி போன்ற அமைச்சுப்பதவியை வகித்த போதிலும், அவை மூலம் அம்பாறை மாவட்ட மக்களுக்காக செய்த சேவைகள் தான் என்ன?

25 வருடங்களுக்கு முன்னர் மறைந்த மாமனிதர் மர்ஹும் அஷ்ரபினால், அவரது அபிலாஷையாக அடிக்கல் நாட்டப்பட்ட நிந்தவூர் அஷ்ரப் பொதுமண்டபக் கட்டிடம், இன்று வரை பூர்த்தி செய்யப்படாது காட்சியளிக்கும் பரிதாப நிலை பெரும் வேதனை அளிக்கின்றது.

எனவே, முஸ்லிம் மக்கள் இத்தகைய இன்றைய நிலமையை முக்கிய கவனத்திற் கொண்டு தமது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்த வேண்டும்.

சமூகத்தின் குரல், நமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முஸ்லிம் சமூகத்தின் குரலாக, அர்ப்பணிப்புடன் செயற்பட்டதால் இந்த அரசினதும், பேரினவாதத்தினதும் நெருக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளார்.

தனது சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தட்டிக்கேட்டு, சமூகத்திற்காக நீதி, நேர்மையுடன் அரசியல் செய்த அவரைப் பழிவாங்கி, அவரது குரல்வளையை நசுக்கிவிடவும் முனைப்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

முஸ்லிம் சமூகத்தையே பங்கரவாத முத்திரை குத்தி, இந்த சமூகத்தைத் தோற்கடித்து, அவலத்திற்குள்ளாக்கத் துடித்துக் கொண்டிருக்கும் இந்த அரசிற்கும், பேரினவாத சக்திகளுக்கும் எதிராக, கடந்த காலங்களில் நாம் பாராளுமன்றம் அனுப்பிய நான்கு கிளிக் குஞ்சுகளும் எதிர்க் குரலையாவது எழுப்ப வக்கற்றிருந்தமை கவலையளிப்பதாகும்.

என்னைப் பொறுத்தவரையில், கடந்த பலவருடங்களாக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராகவிருந்து, மக்கள் சேவையை பெரும் திருப்தியுடன் செய்து காட்டிய பின்னரே, இன்று பொதுத்தேர்தலில் களமிறங்கியுள்ளேன்.

நேரடி சான்றுகளுடன் நமது மாவட்ட மக்கள் என்னையும், எனது சேவைகளையும் புரிந்துகொண்டு,  என்மீது நம்பிக்கை வைத்து அணிதிரண்டுள்ளனர்.

உரிமையுடன் கூடிய பல அபிவிருத்திகளை எம் தலைவர் மர்ஹும் அஷ்ரப் செய்து காட்டினார். அவர் வழியில் ஓர் செயல் வீரனாக, சமூகத்தின் காவலனாக, தலைவனாக நம் தலைவர் ரிஷாட்டை முஸ்லிம் மக்கள் ஏற்றுள்ளனர்”  இவ்வாறு அவர் கூறினார்.

Related Post