சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் வடமாகாணம் முழுவதிலும் வாழ்ந்த சுமார் ஒரு இலட்சம் முஸ்லிம்கள், வடமாகாணத்தை விட்டே விரட்டியடிக்கப்பட்டார்கள். மாற்றுவதற்கு உடை கூட எடுக்க அனுமதிக்கப்படாமல் உடுத்த உடையோடு வயோதிபத் தாய்மார்களும், தந்தைமார்களும், கர்ப்பிணித் தாய்மார்களும், கைக்குழந்தை தாய்மார்களும், பச்சிளம் குழந்தைகளும் உண்ண உணவின்றி, தாகம் தீர்க்க தண்ணீர் இன்றி வீதியோரங்களில் தலைசாய்த்து, களைப்பாறி, பாதங்கள் புண்ணாக நூற்றுக்கணக்கான மைல் தூரத்தை, கொடுவெயிலிலும் கும்மிருட்டிலும் தள்ளாடி தள்ளாடி நடந்த காட்சிகள் இன்னும் எம் நெஞ்சில் இளமையோடுதான் இருக்கின்றன.
புத்தளம் மாவட்டம், குருநாகல் மாவட்டம், அனுராதபுரம் மாவட்டத்தில் புகலிடம் புகுந்த வடமாகாண முஸ்லிம்கள், படுக்க இடமின்றி பாதையோரங்களிலும், பற்றைகளுக்கருகிலும் கண்ணீர் வழிந்தோட, கண்ணுறங்க போராடிய காட்சி எம் இதயத்தில் இரத்தம் ஓடச் செய்துகொண்டிருக்கின்றது.
அகப்பட்ட இடங்களில் ஆளுயரக் குடிலமைத்து, இலைகுழைகளால் கூரை வேய்ந்து, எத்தனை நாட்கள் இந்த மக்கள் வீடு வாசலின்றி தவித்தார்கள் என்பது, இன்றும் எம் சிந்தனையை சிதறடித்துக்கொண்டிருக்கிறது.
இந்த வேளையில்தான் இளைஞனான ரிஷாட் பதியுதீன், இந்த மக்களுக்கு விடிவு வேண்டுமென எண்ணம்கொண்டார். சொல்ல முடியாத கஷ்டங்களோடும் வறுமையோடும் போராடி வாழும் மக்கள், எப்போது சொந்தக்காலில் நிற்பதென சிந்தித்தார்.
அகதிகளுக்கு ஒளியேற்ற அரசியல் அதிகாரமே பொருத்தமானதென அவரது மனம் சொல்லிக்கொண்டிருந்தது. அரசியலில் அதிக விருப்பமில்லாமல் இருந்த அவருக்கு வேறுவழி தெரியவில்லை.
1990 இல் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களை அவர்கள் சொந்த இடத்துக்கே மீள்குடியேற்ற செய்விப்பதும் அவரது முதல் இலட்சியமாக இருந்தது. அவர்கள் வாழ்ந்த இடங்கள் வளைத்துப் பிடிக்கப்பட்டு, பிறரின் ஆட்சிக்கு வந்திருப்பதை அவர் அறியாமலில்லை. அவர்களை வெளியனுப்புவதென்பதும் அத்தனை சுலபமான காரியமாகத் தெரியவில்லை.
அதற்கு அதிகாரம் தேவைப்பட்டது. அதிக அதிகாரம் தேவைப்பட்டது. அந்தத் தேவையை நெஞ்சில் நிறுத்தி, மக்களுடைய காணி நிலங்களையும் வீடு வாசல்களையும் பெற்றுக்கொடுக்கும் இலட்சியத்துக்காக அரசியலில் நுழைந்தார்.
“ஆமாம் சாமி” போட்டுக்கொண்டு, பாராளுமன்ற ஆசனத்தை சூடாக்கிக்கொண்டிருக்கும் எம்.பி பதவியை தன் மக்களுக்காக, இலட்சியங்களுக்காக அர்த்தமுள்ள பதவியாக மாற்ற வேண்டுமென்று தீர்மானித்தார். வெறும் வாய்ச்சவால்களால் தம்மை சதாவும் பதவியில் நிலைக்கச் செய்வதற்காக முஸ்லிம்களை ஏமாற்றிக்கொண்டிருக்க அவர் விரும்பவில்லை.
அகதி மக்களுக்கு ஆயிரம் தேவைகள் இருக்கின்றன. அவற்றின் முடிச்சுக்கள் அதிகாரத்திலிருப்பவர்கள் கையிலே இருந்தன. பல தசாப்தங்கள் தாண்டிவிட்ட மக்களின் வெற்றி, வீரவசனம் பேசி இன்னும் இழுத்தடிக்க முடியாதென உணர்ந்தார்.
எனவே, மக்களுக்காக பேசும் அதிகாரத்தை கையிலெடுப்பது காலத்தின் கட்டளையாக இருந்தது. பரீட்சார்த்தமான பல பிரேரணைகளின் முடிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை உருவாக்கி, அதன் தலைவராக வேண்டிய நிர்ப்பந்தமும் அவருக்கே ஏற்பட்டது. மற்றவர்கள் மடி காலில் விழுந்து பெற்ற தலைமைப் பதவி அல்ல இது.
அவர் அமைச்சரானதும் அல்லாஹ்வின் ஏற்பாட்டில் உள்ளதுதான். மன்னார் கடல் மீன்பிடிகாரர் பிரச்சினையிலிருந்து வில்பத்து விவகாரம் வரை, விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் இழந்தவற்றை மீட்டுக்கொடுப்பதில் அவர் பின்நிற்கவில்லை. சட்டமன்றம் வரை அவரை இழுத்து சரணடைய வைக்கப் பார்த்தார்கள்.
அல்லாஹ்வுக்கு அடிபணிந்து, சுஜூதில் விழுந்த தலை அற்பப்பதவிகளுக்காகவும், அநியாயக்காரர்களின் அழுத்தங்களுக்காவும் குனிந்துகொடுக்காது என்ற வைராக்கியத்தில் வாழ்ந்து வருபவர் ரிஷாட் பதியுதீன்.
எனவே, வரும் தேர்தலில் இவரின் வெற்றியை உறுதிப்படுத்துவோம். சமூகத்தின் நிம்மதிக்கு சதா வழிகோலுவோம்…!
வன்னியூரான்