Breaking
Mon. Dec 23rd, 2024

 

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்களை நேசிக்கின்ற, முஸ்லிம் சமூகத்தின் விடிவுப் போராட்டத்திற்காக குரல் கொடுக்கின்ற ஒரு கட்சியாகும் என லக்ஸல நிறுவனத்தின் தலைவரும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.

இறக்காமம் பிரதேச சபைக்கு வறிப்பத்தாஞ்சேனை வடக்கு வட்டாரத்திலிருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும், பிரதம வேட்பாளர் எஸ்.ஏ.அன்வரை ஆதரித்து வறிப்பத்தாஞ்சேனையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வறிப்பத்தாஞ்சேனை பிரதேச அமைப்பாளர் எம்.எஸ்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இத்தேர்தல் வட்டார அடிப்படையில் நடைபெறுவதால் கடந்த காலங்களைப் போல் கட்சிகள் நிறுத்துகின்ற அறிமுகமற்ற ஒருவருக்கு வாக்களிக்கின்ற அவசியம் இல்லை. அந்தவகையில் நாம் வசிக்கின்ற வட்டாரத்தின் நாயகனை மண்ணின் பிதாமகனை தெரிவு செய்வதற்கான தேர்தலே இதுவாகும்.

எனவே குடும்ப பலமும், மக்கள் ஆதரவும் கொண்ட உங்களில் ஒருவரான வெற்றி வேட்பாளர் அன்வரை ஆதரிப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

அம்பாறை மாவட்டத்தற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடந்த 2015ம் ஆண்டளவில் வருகை தந்தபோது, சுமார் 35000 மக்களால் கவரப்பட்ட ஒரு கட்சியாக, எமது கட்சியின் முதற்பிரவேசமே சிறப்பாக அமைந்தது. இறக்காமம் வறிப்பத்தாஞ்சேனை பிரதேச மக்களின் அமோக ஆதரவு எமக்கு கிடைத்தது.

இதன் காரணமாக எமது கட்சியின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இந்தக் குறுகிய காலப்பகுதயில் ஏறத்தாழ 03 கோடி ரூபாய்க்கும் அதிகமான அபிவிருத்திகளை இப்பிரதேசத்தில் மேற்கொண்டுள்ளார். ஆனால் கடந்த 17 வருடங்களாக வெறும் கோஷங்களை மட்டும் மூலதனமாக வைத்துக்கொண்டு, இப்பிரதேசத்தில் எந்த அபிவிருத்தியையும் செய்திராத முஸ்லிம் காங்கிரஸ், இன்று எமது வருகையின் பின்னர் அபிவிருத்தி பற்றி பேசுவதை காண்கின்றோம். ஆனால், எமது கட்சியின் பிரவேசத்தின் பின்னரே இப்பிரதேசம் அபிவிருத்தி காணத்தொடங்கியது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

எனவே தொடர்ந்தும் இப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் பயணத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸோடு கைகோர்த்து, அதன் வேட்பாளர் அன்வரை ஆதரித்து வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார். இந்நிகழ்வில் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல், இறக்காமம் பிரதேச வேட்பாளர் மௌலவி நௌபர் உட்பட ஏராளமான ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

 

Related Post