Breaking
Mon. Dec 23rd, 2024

ஊடகப்பிரிவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இரும்புக்கோட்டைக்குள்ளே வெளியேறுவதற்கு பேரினக் கட்சிகளின் அரசியல்வாதிகளும், முன்னோடி முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும், சிறிய கட்சிகளின் தலைவர்களும் அஞ்சிக்கொண்டிருந்த போதும், சமூகத்தின்பால் கொண்டிருந்த அன்பினால் உயிரையும் துச்சமெனக் கருதாது, முதன்முதலாக வெளியேறிய சிறிய கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியே என்று அக்கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னாரில் நேற்று இடமபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாம் சிறிய கட்சியாக இருந்த போதும், இறைவனை முன்னிறுத்தி மிகவும் தைரியமாக கடந்த அரசிலிருந்து வெளியேறி, மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தோம்.

தமிழ்ச் சமூகமும், மலையக சமூகமும், முஸ்லிம் சமூகமும் மஹிந்தவுக்கு பாடம் புகட்ட வேண்டுமென்று முடிவெடுத்த பின்னர், அப்போதைய மஹிந்த அரசில் அங்கம் வகித்த சிறிய கட்சிகள் யாரை ஆதரிப்பது என்று தடுமாறிக் கொண்டிருந்த போது, நாம் துணிச்சலுடன் முடிவெடுத்து மைத்திரியை ஆதரிக்க முன்வந்தோம்.

யுத்தம் முடிவடைந்திருந்த போது, பெரும்பான்மைச் சமூகத்திலுள்ள ஒருசில மதகுருமார்கள் இனவாதத்தைத் தூண்டி சிறுபான்மையினரின் மத உரிமைகளை அடக்குகின்ற – ஒடுக்குகின்ற, அவர்களின் பொருளாதாரத்தை நாசமாக்குகின்ற அனாச்சாரங்களில் ஈடுபட்டனர்.

இனவாத மதகுருமாரின் நடவடிக்கைகளை அடக்க முடியாது, அந்த அசிங்கங்களை பார்த்துக்கொண்டு வாளாவிருந்த நாட்டுத்தலைவரை, வீட்டுக்கு அனுப்புவதற்கு நாங்கள் அடிகோலி இருக்கிறோம்.

மக்கள் காங்கிரஸ் மக்களின் அடிநாதத் துன்பங்களை தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட கட்சியே.

சமூக சிந்தனையுடனும், தூரநோக்குடனும் உருவாக்கப்பட்ட இந்தக் கட்சி, தனது பணிகளை நேர்மையுடனும், உண்மையுடனும் முன்னெடுத்து வருகின்றது.

அகதியாக வெளியேற்றப்பட்டு, அகதிகளுடன் அகதியாக வாழ்ந்து பல்வேறு துன்பங்களை அனுபவித்ததன் விளைவினாலேயே, இந்த சமூகத்துக்கு விடிவுகிட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலுக்குள் உந்தப்பட்டேன்.

அகதி மக்களின் வறுமை, கொடுமையான வாழ்வு, மழை வந்தால் ஒழுகும் கொட்டில்களில் அவர்கள் பட்ட துன்பங்கள்தான், எனது அரசியல் செயற்பாடுகளை தீவிரப்படுத்தியது. பாராளுமன்ற உறுப்பினரான பின்னர் பிரதியமைச்சர் அமீர் அலி போன்ற மேலும் ஒருசிலருடன் இணைந்து தனிக்கட்சி ஆரம்பிக்கக் கூடிய பாக்கியத்தை இறைவன் எமக்குத் தந்தான்.

எனவே, இறை உதவியுடன் எமது கட்சிச் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.

 

Related Post