Breaking
Fri. Dec 27th, 2024

நாட்டின் சுதந்திரம் முழு சமூகங்களதும் உரிமைகளுக்கு அடையாளமாகத் திகழ வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“சகல சமூகங்களதும் உரிமைகளை அங்கீகரித்துத்தான் பிரித்தானியர் நாட்டுக்கு சுதந்திரம் வழங்கினர். இந்த சுதந்திரத்தைப் பெறுவதற்காக சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க தலைவர்கள் ஜனநாயக செயற்பாடுகளை முன்னெடுத்தனர். இதனால், எதிர்கொண்ட இன்னல்களுக்கு சகல சமூகங்களும் முகங்கொடுக்க நேர்ந்தது. இப்படிப் பெறப்பட்ட சுதந்திரம் இன்று பாரபட்சமாக்கப்பட்டுள்ளதோ! என எண்ணத் தோன்றுமளவு அரசியல் நிலமைகள் மாறியுள்ளன.

குறித்த சமூகங்களை மாத்திரம் இலக்கு வைக்கும் அல்லது ஓரங்கட்டும் அரசியற் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளால் நாட்டுப்பற்றிலிருந்து மக்கள் தூரமாகும் நிலைமையே ஏற்படும்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்புச்சட்டம் என்பவை அரசியல் நோக்குகளுக்காகவே நிறைவேற்றப்பட்டுள்ளன. அரச விரோத செயற்பாடுகளை விமர்சிக்கும் அல்லது கண்டிக்கும் மக்களின் உரிமைகள் இந்தச் சட்டங்களால் மறுக்கப்பட்டுள்ளன.

கடந்தகாலங்களில் ஒரு சிலர் செய்த நாசவேலைகளுக்காக குறித்த சமூகங்களையே பழிவாங்கும் அரச செயற்பாடுகள் நடந்ததை நாம் மறப்பதற்கில்லை. பெரும்பான்மை பலத்தால் மாற்று சமூகங்களை கருவறுக்கும் மனநிலைகள் அரசாங்கத்துக்கு உள்ளவரை சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடியாது.

எனவே, இந்த சுதந்திர தினத்திலாவது சகலரையும் தாய் நாட்டுப்பற்றுடன் அரவணைக்கும் செயலில் அரசாங்கம் ஈடுபட வேண்டும்” என்றார்.

Related Post