நீண்ட காலமாக சம்மாந்துறை பிரதேசத்தில் ஒரு பொழுதுபோக்கு வலயம் இல்லாத குறையை நிவர்த்திக்கும் முகமாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த போது பிரமாண்டமான பொழுதுபோக்கு வலயம் அமைப்பதற்கான காணிகள் அடையாளம் காணப்பட்டு இருந்ததுடன் அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தன.
தற்போது பிரமாண்டமான பொழுதுபோக்கு வலயம் அமைப்பதற்கான அடையாளம் காணப்பட்ட காணிகளை சுவீகரிப்பதற்கான ஆலோசனைக் கூட்டமானது சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் இடம்பெற்றது.
இவ்வாலோசனைக் கூட்டத்தில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், மாவட்ட நில அளவையாளர் ரபீக், உதவி காணி ஆணையாளர் திருமதி.இப்திகார் லத்திப், மாவட்ட காணி உத்தியோகத்தர் முசம்மில் உட்பட சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.சுவிகரிக்கப்படும் 31 ஏக்கர் காணியில் மலர்ப்பூங்கா, நவீன மயமான சிறுவர்களுக்கான விளையாட்டுத்தொகுதி, நீர்த்தடாகம், சுற்றிவர நிழல்தரும் மரங்கள், கடைத்தொகுதிகள் உட்பட ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட பிரமாண்டமான வலயமாக உருவாக்கப்பட இருக்கிறது.
குறித்த பிரமாண்டமான பொழுதுபோக்கு வலயம்.சம்மாந்துறையில் அமையப்பெறும் பட்சத்தில் பல்லாயிரக்கனக்கான மக்கள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.