சம்மாந்துறைகென்று பல தனித்துவங்களுள்ளன. அது அரசியல் ஜாம்பவான்கள் பலரை பிரசவித்த ஊர். இதிலுள்ள அரசியல்வாதிகளும், மக்களும் எப்போதும் நாகரீகமான பண்புகளையே வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த பாராளுமன்ற தேர்தலில் சிறிய வாக்கு வித்தியாசத்தில் மயில் பாராளுமன்ற ஆசனத்தை இழந்திருந்தது. அன்று மயிலுக்கு ஒரு ஆசனம் கிடைத்திருந்தால், அது வீ.சியுடைய ஆசனமாக இருந்திருக்கும். அம்பாறை மாவட்ட முழு வாக்கையும் திரட்டி சம்மாந்துறை மகனொருவனை பாராளுமன்றம் அனுப்பிவைக்க மயில் திட்டம் தீட்டியது. இது சம்மாந்துறைக்கு மயிலால் கிடைத்த பெருங் கௌரவங்களில் ஒன்றல்லவா..?
இரண்டாவது கௌரவமாக சம்மாந்துறை மண்ணுக்கு தேசியப்பட்டியல் வழங்கியதை குறிப்பிடலாம். சம்மாந்துறை மண்ணுக்கு தேசியப்பட்டியல் வழங்கும் வாக்குறுதியை அ.இ.ம.காவினர் தேர்தல் காலத்தில் ஒரு போதும் வழங்கியிருக்கவில்லை. பொதுவாக தேர்தல் காலத்தில் தேசியப்பட்டியல் வாக்குறுதி வழங்கி வாக்கு பெறுவதே நாம் கண்ட கட்சிகளின் வழமை. வழமைக்கு மாற்றமாக, தேர்தலுக்கு முன் வாக்குறுதி வழங்காத ஒருவருக்கு மயில் தேர்தலில் தோல்வியை தழுவிய பின்னர் தேசியப் பட்டியலை வழங்கியிருந்தது. இது மயிலால் சம்மாந்துறைக்கு கிடைத்த கௌரவமல்லவா? கடந்த காலங்களில் நாம் பா.உறுப்புரிமையை இழந்து தவித்த போது எமக்கு மு.கா போன்ற கட்சிகள் தேசியப்பட்டியலை வழங்கி கௌரவித்திருக்கலாம். *நாம் சிறிதாவது அவர்களது கணக்கில் வந்தோமா..?
கடந்த முறை பல இடங்களில் அ.இ.ம.காவினர் தேசியப்பட்டியலை வழங்க வேண்டிய தேவையுடையவர்களாக இருந்தனர். மயிலின் கைக்கு ஒரே ஒரு தேசியப்பட்டியலே கிடைத்துமிருந்தது. முதற் கட்டமாக புத்தளம் நவவி ஹாஜியாருக்கு தேசியப்பட்டியலை வழங்கியிருந்தனர். புத்தளத்தளத்துக்கு வழங்கப்பட்ட தேசியப்பட்டியலை எடுக்க வேண்டாம் என்ற பிரச்சாரம் புத்தளத்தில் தீவிரமாக முடுக்கியும் விடப்பட்டிருந்தது. அ.இ.ம.காவின் தலைவர் ஏனைய மாவட்டங்களை விட அம்பாறைக்கு முக்கியத்துவம் வழங்கிறார் என்ற சிந்தனை தூண்டியே அந்த பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இது ஆபத்தானதொரு பிரச்சாரம். இந் நிலையிலேயே புத்தளத்துக்கு வழங்கப்பட்டிருந்த தேசியப்பட்டியலை எடுத்து அ.இ.ம.காவின் தலைவர் வீ.சிக்கு வழங்கியிருந்தார். இது சம்மாந்துறைக்கு மயிலால் கிடைத்த கௌரவமல்லவா?
இந்த தேசியப்பட்டியலை டொக்டர் சாபியும் எதிர்பார்த்திருந்தார். அவரும் சொற்ப வாக்கில் தோல்வியை தழுவியவர். அவருக்கு இந்த தேசியப்பட்டியலை வழங்கியிருந்தால் சில வேளை இனவாத பிடிக்குள் அகப்பட்டிருக்க மாட்டார். இன்னும் சிலர் இவருக்கு வழங்கியதால் கட்சியை விட்டும் விலகினர். சம்மாந்துறை மண்ணுக்கு தேசியப்பட்டியலை வழங்க அ.இ.ம.காவின் தலைவர் எத்தனை சவால் எதிர்கொண்டிருப்பார் என சிந்தித்து பாருங்கள்.
அ.இ.ம.காவுக்கு கிடைத்த முதலாவது முழுமையான தேசியப்பட்டியல் கடந்த முறையே கிடைத்திருந்தது. அந்த முதல் தேசியப்படிலை எந்தனையோ ஊர் சுவைக்க மிகத் தகுதியுடையனவாகவிருந்தும் சம்மாந்துறை சுவைத்து பார்த்திருந்தது. கம்பெரலிய நிதிக்குள் நீந்தியது. கடந்த ஆட்சியின் சிறந்த பகுதி கம்பெரலியவே! இது சம்மாந்துறைக்கு மயிலால் கிடைத்த கௌரவமல்லவா?
சம்மாந்துறை மண்ணுக்கு தேசியப்பட்டியலை வழங்கும் பரிந்துரைக்கு பலர் ( சம்மாந்துறைக்கு வெளியே உள்ளவர்களும் ) படியேறியிருந்தனர். சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையும் அ.இ.ம.கா தலைவரிடம் பரிந்துரைத்திருந்ததாக பேசப்பட்டிருந்தது. இன்னும் பலரை என்னால் கோடிட்டு காட்ட முடியும். இந்த பரிந்துரையில் கிடைத்த தேசியப்பட்டியலை பெற்ற சம்மாந்துறை மகன் அ.இ.ம.கா கட்சியின் முடிவுக்கு எதிராக 52 நாள் ஆட்சி மாற்றத்தின் போது மஹிந்தவை பிரதமராக்க முயன்றார். அத்தோடு அவரது உறவை தூரமாக்கியது மயில். இந்த தேசியப்பட்டியல் புத்தளத்தில் இருந்திருந்தால் இப்படி பறி போயிருக்காதென சிலர் எள்ளி நகையாடினர். சம்மாந்துறை மண்ணுக்கு தேசியப்பட்டியலை வழங்கி அ.இ.ம.காவின் தலைவர் அவமானத்தையும் சம்பாதித்தார். நாம் அவ்வாறான பண்பு கொண்டவர்களா?
இது எமது சம்மாந்துறை மகன் செய்த பிழையான செயற்பாடு. (ஒப்பந்த அடிப்படையில் வீ.சி தேசியப்பட்டியலை பெற்றிருந்தால், அதனை விரும்பிய பிரகாரம் அவர் பயன்படுத்தியிருக்கலாம்) இலகுவாக வீ.சி பிழையை செய்துவிட்டார். இவருக்கு பரிந்துரைந்தவர்களின் முகங்களில் கரியை பூசிவிட்டார். இவ்வாறான துரோகிகள் தான் சம்மாந்துறை மக்களா என ஏனையோர் பேசுமளவு இழிவுபடுத்திவிட்டார். இந்த கறை எம் சம்மாந்துறை மண் மீது படிந்துள்ளது. இதனை நாம் துடைத்தாக வேண்டும். இம் முறை மயிலை ஆதரித்து சம்மாந்துறை மக்கள் நன்றி கெட்டவர்களலல்ல என்பதை சொல்ல வேண்டும். இத்தனை தூரம் எம்மை கௌரவப்படுத்திய மயிலை ஆதரிப்பதில் என்ன தவறு..?
சிந்திப்போம்… செயற்படுவோம்.. எம்மை கௌரவிப்பவனை, நாம் கௌரவிப்போம்!
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.