இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் நமது பாடசாலை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயம் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டியுள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.
1975 ஆம் ஆண்டு முதன்முதலாக நான்கு மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றதுடன் அடுத்த ஆண்டு ஒரே வகுப்பில் கல்வி கற்ற ஒரு மாணவனைத் தவிர இருபத்தி நான்கு மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்று வரலாற்று சாதனையை நிலைனாட்டியுள்ளனர்.
அன்று முதல் தொடர்ச்சியாக ஒவ்வொருவருடமும் நமது பாடசாலையிலிருந்து வைத்தியம், பொறியியல், கலை, வர்த்தகம், சட்ட பீடங்களுக்கு மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். இவர்கள் இன்று பல்வேறு துறைகளிலும் கடமையாற்றி நமது பாடசாலைக்கு புகழ் சேர்த்துக்கொண்டிருக்கின்றார்கள் இதற்கு மேலாக பல்கலைக்கழக பேராசிரியர்களை மாத்திரமல்லாது இரு உபவேந்தர்களை உருவாக்கிய ஒரேயொரு பாடசாலை கிழக்கு மாகாணத்தில் நமது பாடசாலைதான் என்பதும் மற்றுமொரு வரலாற்றுச் சாதனையாகும்.
2006ஆம் ஆண்டு கலைத்துறையிலும் , 2018 இல் தொழில்நுட்பத் துறையிலும் அகில இலங்கை ரீதியில் இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டமையும் நமது பாடசாலையின் இன்னுமொரு சாதனையாகும். 2016 இல் மாணவர்கள் வைத்திய பீடத்துக்கு தெரிவுசெய்யப்பட்டதுடன் 2018 இல் 9 மாணவர்களும் அல் மர்ஜான் கல்லூரியிலிருந்து ஒரு மாணவியும் தெரிவு செய்யப்படுவதற்கான சந்தர்ப்பத்தை அல்லாஹுதஆலா ஏற்ப்படுத்தித் தர வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.
இம்முறை வெளியாகிய உயர்தரப் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் பொறியியல் , உயிரியல் பிரயோக விஞ்ஞானம், தொழில்நுட்பவியல் , கலை , வர்த்தக துறைகளில் அதிகமான மாணவர்கள் தெரிவுசெய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக நினைக்கிறேன். அனைத்து மாணவர்களும் நமது சொத்து கல்விதான் என்பதை உணர்ந்து பொருத்தமான உயர்கற்கை நெறிகளை தெரிவுசெய்து அர்ப்பணிப்புடனும் தியாகத்துடனும் கல்விப்பணியைத் தொடரவேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நமது மாணவர்களின் இத்தனை சாதனைகளுக்கும் நேரடியாக பங்களிப்புச் செய்த ஆசிரியப் பெருந்தலைகளையும் , பெற்றோர்களையும் , கல்விசாரா உத்தியோகத்தர்களையும், அதிபர்களையும், பிரதி அதிபர்களையும் மனதார வாழ்த்துகிறேன்.
பல்வேறு வசதிகளையும் , ஏற்பாடுகளையும் செய்துகொடுத்த வலயக்கல்விப் பணிப்பாளர்கள், கல்விப் பணிமனையின் உத்தியோகத்தர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பழைய மாணவர்கள் , நலன் விரும்பிகள் , பாடசாலை சமூகத்தினர் அனைவரையும் வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக சாதனைகளை நிலைநாட்டி நம்மையெல்லாம் மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டிருக்கிருக்கின்ற நமது மாணவச்செல்வங்கள்தான் முதன்முதலான பாராட்டுக்குரியவர்கள்.
அன்பின் சம்மாந்துறை கல்விச்சமூகமே ! மத்திய மகா வித்தியாலயலயமும் (தேசிய பாடசாலை) , அல் மர்ஜான் மகளிர் கல்லூரியும் நமது இரு கண்களாகும் . நீண்ட கால வரலாற்றைக் கொண்ட நமது பெண்கள் கல்லூரி ஆரம்ப காலங்களில் சாதனைகளை நிலைநாட்டினாலும் அண்மைக்காலங்களில் சாதிக்கத் தவறிவிட்டது. 12 வருடகாலமாக நமதூரின் அரசியல் இடைவெளியில் மிகவும் பாதிப்படைந்தது இப்பாடசாலைதான் என்பது இன்று சம்மாந்துறையின் பேசுபொருளாக இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் அணிதிரண்டு நமது பெண்கள் கல்லூரியின் முன்னேற்றத்துக்காக உழைக்க நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக.