Breaking
Wed. Jan 8th, 2025
சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வளத்தாப்பிட்டி, கரங்கா வட்டையில் முஸ்லிம்கள் பூர்வீகமாக வேளாண்மை செய்து வருகின்றனர். உரிய சட்டப்பூர்வ ஆவணங்களும் அவர்களிடம் உள்ளன.
இந்நிலையில், அவர்களது காணிகளுக்குள் அத்துமீறும் ஒரு சில பெரும்பான்மையினர், அவ்விவசாயிகளை அச்சுறுத்தி வருவதுடன், செய்கை பண்ணவிடாது பல இடைஞ்சல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பாதிப்படையும் விவசாயிகள், தமது பொருளாதாரத்தையும் இழந்து வருகின்றனர்.
குறித்த வயல் காணிகளில் முஸ்லிம் விவசாயிகள் மகாபோக வேளாண்மை செய்கை செய்துள்ளனர். கடந்த 07 ஆம் திகதி அக்காணிகளுக்குள் அத்துமீறிய பெரும்பான்மை இனத்தவர்கள், சட்டவிரோத உழவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பயிர் நிலையில் இருந்த விவசாயம் நாசகாரமாக்கப்பட்டுள்ளது. இதைக் கேள்வியுற்று அங்கு சென்ற முஸ்லிம் விவசாயிகளையும் மிரட்டியுள்ளனர்.
இப்பிரச்சினையை சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.சீ.எம்.சஹீல், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரபின் கவனத்திற்கு நேற்று (08) கொண்டு சென்றார்.
விடயம் அறிந்து உடனடியாக அங்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப், பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேற்று மாலை (08) சந்தித்துக் கலந்துரையாடினார்.
உரிமைப்பத்திரம் உட்பட சகல ஆவணங்களையும் காண்பித்த விவசாயிகள், தாம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளையும் உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். ஆவணங்களை ஆராய்ந்த அவர், எதிர்வரும் நாட்களில் நிர்வாக ரீதியான உரிய தீர்வை பெற்றுத்தருவதாக தெரிவித்தார். தவறும் சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தின் ஊடாக நீதியை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post