மைத்திரிபால சிறிசேனவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு முன்னதாகவே அரசின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய அரச பொறுப்புகளிலிருந்து வெளியேறியிருந்தது. இன்னும் அரசில் அங்கத்துவம் வகித்துக்கொண்டிருக்கும் அமைச்சர்கள் பலரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முதுகெலும்பாக இருந்துகொண்டிருக்கிற பெருந்தலைகளும் ஜனாதிபதித் தேர்தலில் பொது அபேட்சகருக்கு ஆதரவளிக்கக் கூடுமான சூழ்நிலைகள் எழுந்துள்ளன.
ஜாதிக ஹெல உறுமய, பத்தொன்பது அம்சக் கோரிக்கைகள் கொண்ட அரசியலமைப்புத் திருத்தத்தை முன்மொழிந்திருந்தது. இந்தக் கோரிக்கைகள் மறுதலிக்கப்படுமானால் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம் என்றும், ராஜபக்சவைத் தோற்கடிப்போம் என்றும் அந்தக் கட்சி பகிரங்கமாகவே சவால் விடுத்திருந்தபோதும் அரசு பொருட்படுத்தியிருக்க வில்லை.
ஆகவே, முன்னர் கூறிய விதமாக ஜாதிக ஹெல உறுமய அரசப் பொறுப்புகளிலிருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளது. மைத்திரிபால சிறிசேனவின் வெளியேற்றம் எந்த வித முன்னறிவிப்பும் இல்லாதிருந்ததுடன், அனுமானத்துக்குக் கூட இடமளிக்காதிருந்தது. 1989-ல் பாராளுமன்றத்துக்குப் பிரவேசித்த மைத்திரிபால சிறிசேன 1994-ல் அமைச்சராகப் பதவிவகிக்கத் தொடங்கியதுடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினராகவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கவின் வலக்கரமாகவும் இருந்துவந்தவர். எனவேதான், சந்திரிகா பண்டார நாயக்க இவரை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராகவும் நியமித்திருந்தார்.