பல்லின மக்கள் வாழும் இலங்கையில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் எவ்வாறு ஏனைய இன மக்களுடன் சமாதான சகவாழ்வு வாழவேண்டுமென அகில இலங்கை ஐம்இய்யத்துல் உலமா சபை முஸ்லிம் சமூகத்தை அறிவுறுத்தியுள்ளது.
அதற்கமைய இலங்கை முஸ்லிம்கள் அனைத்து இனமக்களுடனும் நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். இலங்கை, முஸ்லிம்களின் தாய் நாடு என்பதில் நாம் உறுதிபூண்டுள்ளோம் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
நேற்றுக்காலை அலரி மாளிகையில் நடைபெற்ற, முஸ்லிம்களும் சகவாழ்வுக்கான எதிர்பார்ப்புகளும், எனும் தலைப்பிலான உலக முஸ்லிம் லீக்கின் சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்தாவது,
இஸ்லாம் சமாதானத்துக்கும், சகவாழ்வுக்குமான ஓர் மார்க்கமாகும். ஏனைய மதங்களையோ, மதங்களை அனுஷ்டிப்பவர்களையோ நிந்திக்கவோ, துன்பங்களை விளைவிக்கவோ கூடாது என குர்ஆன் மற்றும் ஹதீஸில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு நிந்தனை செய்தால் தண்டிக்கப்படுவார்கள் என அல்லாஹ் எச்சரிக்கை விடுத்துள்ளான்.
முஸ்லிம்கள் எவ்வாறு ஏனைய இனத்தவருடன் சமாதானமாக சகவாழ்வு வாழ வேண்டும் என அகில இலங்கை žஜம்இய்யத்துல் உலமா சபை 2012 இல் பிரகடனம் ஒன்றினையும் வெளியிட்டுள்ளது. நாட்டிலுள்ள 2700 இமாம்களும் இந்த ஒற்றுமை மற்றும் சகவாழ்வுக்கான பிரகடனத்தைப் பின்பற்றுகிறார்கள்
நீண்டகால யுத்தத்தின் பின்பு இந்நாட்டில் சமாதானம் மலர்ந்துள்ளது. இதனைக் கட்டிக்காப்பது அனைத்து இன மக்களினதும் கடமையாகும்.
எமது பள்ளிவாசல்களில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள ஏனைய இனமக்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏனைய இனத்தவர்கள் இஸ்லாத்தைப் பற்றி கொண்டுள்ள தவறான அபிப்பிராயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என உலமா சபை கருதுகிறது.
பள்ளிவாசல்களில் அதான் கூறுவதற்காக உபயோகிக்கப்படும் ஒலிபெருக்கிகள் அதிக சப்தத்துடன் அல்லாது உபயோகிக்கப்பட வேண்டும் என உலமாசபை தனது சகவாழ்வுக்கான பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளது. மற்றும் குர்பான் போன்ற விடயங்களில் மாடுகள் அறுக்கும்போது ஏனைய இன மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் முஸ்லிம்கள் ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக ஏனைய பெளத்த, இந்து, கிறிஸ்தவ மக்களுடன் ஒற்றுமையாக சமாதான சக வாழ்வு வாழ்கிறார்கள். இலங்கை முஸ்லிம்களின் தாய்நாடு இலங்கையாகும். நாம் பெரும்பான்மை மக்களுடனும், அரசாங்கத்துடனும் இணைந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.
அமைக்கப்படும் ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் ஆதரவு வழங்கிவருகிறோம். இலங்கை அரசாங்கமும் முஸ்லிம்களுக்கு பல சலுகைகள் வழங்கியுள்ளது. வக்பு சபை, முஸ்லிம் தனியாள் சட்டம், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், முஸ்லிம் விவகார அமைச்சு, முஸ்லிம் பாடசாலைகள், இஸ்லாமிய வங்கி என்பனவற்றைக் குறிப்பிட்டுக் கூறலாம்.
நாட்டுமக்கள் அனைவரும் அரசாங்கத்தால் சமமாக கருதப்படுகிறார்கள். நல்லாட்சி அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டினையும் நல்லிணக்கத்தையும் வளர்ப்பதற்காக தனியான அமைச்சு ஒன்று உருவாக்கப்பட்டு அது செயற்பட்டு வருகிறது. நாட்டு மக்களின் ஐக்கியத்தைப் பலப்படுத்துவதற்கான ஏற்பாடே இதுவாகும்.
நல்லாட்சி அரசாங்கம் அரசியலமைப்பில் சில திருத்தங்களையும் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்குமிடையில் நெருங்கிய உறவு இருக்கிறது. உலகமுஸ்லிம் லீக்கின் உதவியுடன் இந்த உறவு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஹஜ் மற்றும் உம்ரா கடமைகளின் மூலமும், வேலைவாய்ப்புகள் மூலமும் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் மேலும் வலுவடைகின்றன. எமது நாட்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது சவூதி அரேபியா நிதியுதவி வழங்கி எம்மை அரவணைத்ததை நாம் நினைவு கூருகிறோம்.
இந்நாட்டில் தேசிய ஐக்கியத் தையும், நல்லிணக்கத் தையும் உருவாக்குவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் முன்னின்று உழைக்கிறார்கள். இருபெரும்பான்மைக் கட்சிகளும் இவ்விடயத்தில் ஒன்றிணைந்துள்ளன. நாம் இனமத பேதமின்றி நாட்டை அபிவிருத்திப்பாதையில் இட்டுச் செல்ல ஒன்றிணைவோம் என்றார்.